வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுப்பில் நான்காவது நாவல். அதிலிருந்து அடுத்த சிறு பகுதி
——————————————————————————————————————————————
பக்கத்தில் அடிக்கடி கதவு திறந்து மூட மேலும் கீழும் போய்வர இயங்கும் லிப்டின் கதவுகள் மூடிய நுழைவு வாசல் இருந்தாலும், எந்த லிப்டும் நந்தினி இருக்கும் தளத்துக்கு வராததால் இங்கே இவர்களைத் தவிர யாரும் இல்லை.
நட்பு நாட்டு அதிபருக்கும் தூதுவருக்கும் இந்த நாட்டரசு அளிக்கும் அதிக பட்ச மரியாதையும் பாதுகாப்பும் அழுத்தமாகத் தெரியும் சூழல். மாடிப் படிகளை ஒட்டி சங்கடம் விளைவிக்காமல் துப்பாக்கிகளை ஓங்கிப் பிடித்தபடி நிற்கும் காவலர்களும், ஒரு சிறு குழுவாக பிரதேச ராணுவ வீரர்களும் சத்தம் எழுப்பாமல் படி வளைந்து இறங்கும் இடத்தில் நின்றதை நந்தினி கவனிக்கத் தவறவில்லை.
எமிலி கிட்டே தானே பேசிக்கிட்டிருந்தேன். ஏன் வெளியிலேயே உட்கார்ந்துட்டே?
அப்போ, வேறே யார் கூடவாவது நீ பேசினா நான் வெளியிலே இருக்கணுமா?
நாக்கு நுனி வரை வந்த கேள்வியை அடக்கியபடி நந்தினியோடு உள்ளே போனான் வைத்தாஸ்.
வேண்டாம், இந்த ராத்திரி விலகி இருக்க, அதற்கு நியாயம் கற்பிக்க இருண்டிருக்கும் பொழுதல்ல. படர்ந்து வரும் கருமை, காமமாக, காதலாக அலையடித்து அமிழ்த்தி பழைய பொழுதுகளை மறுபடி சில்லுச் சில்லாக, உடல் ஸ்பரிசமாக, வாடையாக உருவாக்கிக் கிடந்து சுகிக்கச் சொல்கிறது.
நந்தினி படுக்கையில் கால் நீட்டி, சுவரில் சாய்ந்தபடி, நாற்காலியை சுவரை ஒட்டி இறக்கி வைக்கும் வைத்தாஸைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
விழுந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத திரையை யார் கிழித்து வீச வேண்டும் என்று அவளுக்குத் தெரியவில்லை.
திரைக்கு இந்தப் பக்கத்தில் எழும்பி நிற்கும் மதிப்பும் மரியாதையும் கட்டமைத்த அதிகாரமும் அன்பும் சகல வல்லமையும் சேர்ந்த பிம்பமும் பல்லக்குத் தூக்கிகளின் பணிவும், இரைஞ்சுதலும் எல்லாம் அவளுக்கு வேண்டியிருக்கிறது. அது அலுக்கும் போது திரையைக் கடந்து வைத்தாஸிடம் அவள் வருவாள். இனி வரும் நிமிடங்கள் திரையைக் கடக்கும் கணங்களாகலாம்.