வாழ்ந்து போதீரே அத்தியாயம் முப்பத்திநாலு
கால்டர்டேலில் இருந்து லீட்ஸ் ஒரு மணி நேரப் பயணம். அங்கே இருந்து லண்டன். அது இன்னொரு மூணு மணி நேரம். ரெண்டும் ரெண்டு கம்பெனி ரயில்களில்.
கால்டர்டேலில் ஏறி உட்காரும் ரயில் ரொம்பப் பழையது. பிரிட்டீஷ் சாம்ராஜ்யம் போன நூற்றாண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தி அறுபது வருடம் அங்கே சகலமான பிரஜைகளும் நெருங்கி அடித்து உட்கார்ந்து மரப் பலகை ஆசனங்களைத் தேய்த்து, அப்புறம் திரும்ப இங்கிலாந்துக்கு மறு ஏற்றுமதி ஆன ரயில் கம்பார்ட்மெண்ட்கள் கொண்டது. அப்படித்தான் சொல்கிறார்கள். வேடிக்கையாகவோ, உண்மையோ, தெரியாது. ஒரு மணி நேரம், அரை மணி நேரம் பயணத்தில் யாருக்கும் கழிவறையைப் பயன்படுத்த வேண்டியிருக்காது என்று கருதியோ என்னமோ டாய்லெட் என்ற பகுதி சீராக இல்லாத ரயில் அது.
பிற்பகல் ரெண்டரை மணிக்கு கால்டர்டேலில் இருந்து லீட்ஸ் செல்லும் ரயிலின் மர இருக்கையில் ஏறி உட்கார்ந்ததுமே அமேயர் பாதிரியாருக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற நினைவு மெல்லத் தலை காட்டியது.
வந்திருக்காது தான். பயணத்தில் படிக்க என்று கையில் சுருட்டிப் பிடித்துக் கொண்டு வந்திருந்த தினசரிப் பத்திரிகையில் ஒரு கட்டுரை. அது நாலு பக்க இணைப்பாக வந்திருந்த சிறப்பிதழில் அச்சடித்து வந்த ஒன்று.
வீட்டில் தூசியை உறிஞ்சிக் குப்பையை எடுத்து சுத்தமாக்க ஹூவர், துணி துவைக்க வாஷிங் மெஷின், துவைத்து உலர்த்திய உடுப்பை சுருக்கம் இல்லாமல் நேர்த்தியாக்க எலக்ட்ரிக் அயர்ன் பாக்ஸ், ரொட்டி சுட டோஸ்டர் என்று வாங்கத் தூண்டும் பொருட்கள், அவை சரசமான விலையில் கிடைக்கும் இடங்கள் என்று விளம்பரங்களுக்கே ஆன சிறப்பிதழ் அது. அந்த நூதனமாக கருவிகளில் எதுவும் அமேயர் பாதிரியாருக்குத் தேவை இல்லை.
சிறப்பிதழில் வந்திருக்கும் கட்டுரை தான் அவரைப் படிக்கச் சொல்லித் தூண்டியது. கழிப்பறை கிட்டாமல் அடக்க வேண்டிய நேரங்களில் மூத்திரம் பெய்யாமல் இருப்பதற்கான வழிகள் என்று அந்தரங்கமான தலைப்பில் வந்திருக்கும் கட்டுரை அது. படம் கூடப் போட்டு, ஒன்று, இரண்டு என்று பனிரெண்டு அறிவுரைகள்.
கால் மாற்றி நிற்கவும், உட்காரவும், மறுபடி நிற்கவும். தண்ணீர், அருவி, மழை, பனிக்கட்டி, பனி பெய்த தெரு, ஈரக் குடை பற்றி நினைக்காமல் இருக்கவும். வயிற்றில் வாயு இருந்தால் மெல்ல வெளியேற்றவும். கம்பளியைப் போர்த்திக் கொள்ளவும். உடல் குலுங்காது பார்த்துக்கொள்ளவும். காமம் நிறைந்த கற்பனையில் மனதைச் செலுத்தவும். நகைச்சுவையாக எதைப் பற்றியும் நினைத்துக் கொள்ளாமல், நகைச்சுவைத் துணுக்குகளைச் சொல்லாமல், சிரிக்காமல் இருக்கவும். தொடர்ந்து மூன்று மணி நேரம், நான்கு, ஐந்து, ஆறு மணி நேரம் வரை சிறுநீர் கழிக்காமல் இருக்கும் நேரத்தை அதிகரித்துப் பழகவும்.
எதுவுமே பாதிரியார்களுக்கு ஆனதில்லை. முக்கியமாக காமம் நிறைந்த கற்பனையில் மனதைச் செலுத்தச் சொல்லும் ஆலோசனை. மனுஷனை திரும்பவும் சகதியில் தள்ளுகிற, அதிலேயே கிடந்து இன்பம் கண்டு, ஆவியை கர்த்தருக்கு ஒப்புக் கொடுக்காமல் போகிற தீச்செயலில் ஈடுபடுத்தும் சாத்தான் அது. நடு நாயகமாக அதற்குப் போட்டிருக்கும் கோட்டு ஓவியமும் பத்திரிகையில் வெளிவரத் தகுந்ததில்லை. அணைத்துக் கொண்டு கையே ஆடையாக ஒருவரை ஒருவர் மறைத்து இருக்கிற ஆணும் பெண்ணும் மனதில் இன்னொரு பெண்ணையும் இன்னொரு ஆணையும் நினைத்தபடி கிடக்கிற வண்ணப் படம் அது. அந்தப் பக்கத்தில் கண் போகாமல் திட சித்தத்தோடு தவிர்த்தபோது டாய்லெட் போகணும் என்று வயிறு முணுமுணுக்க ஆரம்பித்தது.
ரயில் நிற்கிற மாதிரி தோன்றி அது முழுசாக மனதில் பதியும் முன்னால் திரும்ப நகர்ந்து மெல்ல வேகம் கொண்டது.
ஸ்தோத்ரம் அச்சன்.
கொஞ்சம் விதிர்விதிர்த்து அமேயர் பாதிரியார் நிமிர்ந்து பார்க்க, முசாபர் முன்னால் நின்றான்.
அவருக்கு சந்தோஷம் மனசில் நிறைவாச்சு.
இதென்ன ஹதிம் தாய் சினிமா படம் போல, நினைக்கிறதுக்கு முன்னால் வந்து குதிக்கிறாய் முசாபரே.
கேட்டபடி சுற்று முற்றும் பார்த்தார் அவர். ரயில் பெட்டியில் அவரையும், பக்கத்தில் நிற்கிற முசாபரையும் வாசல் பக்கத்து இருக்கையில் குடையும், புராடஸ்டண்ட் மதப் பிரசுரங்களோடு இருந்த, கத்தரிப்பூ வர்ணப் பாவாடை அணிந்த சோனியான ஆப்பிரிக்கப் பெண்மணியும் தவிர வேறே யாரும் இல்லை.
ஆப்பிரிக்கப் பெண் இருக்கும் இடத்துக்கு வெகு அருகே, நேர் எதிரில் ஒடுக்கமான டாய்லெட் உண்டு. அங்கே அற்ப சங்கை தீர்க்கப் போனால் அவளுக்கோ தனக்கோ ரெண்டு பேருக்குமோ சங்கோசம் ஏற்படலாம்
வேண்டாம், சிறுநீர் கழிப்பது பற்றிய எந்த விதமான சிந்தனைக்கும் இப்போது இடம் இல்லை. லண்டன் போய்த் தான் அந்த உபாதை தீர்த்து வைக்கப்படும்.