ஹதீம் தாய் போன்ற கேவா கலர் சினிமா பாணியில் பழங்கதை சொல்லத் தொடங்கியபோது

வாழ்ந்து போதீரே -அரசூர் வம்சம் நாவல் வரிசையில் நான்காவது- அந்தப் புதினத்தில் இருந்து அடுத்த சிறிய பகுதி இங்கே இதோ-

அழகான உச்சரிப்பில் பிபிசி செய்தி வாசிக்கிற அல்லது அரசியல்வாதியைக் கழுத்தில் வார்த்தைக் கத்தி வைத்து நேர்காணல் நடத்தும் ஒளிபரப்பாளன் போன்ற வசீகரமான தோரணைகளோடு முசாபர் கேட்க, அமேயர் பாதிரியார் யோசிக்காமல், அவனிடம் சொன்னார் – சொல்லு.

 

அவருக்கு ஏதாவது பேச வேண்டும். அல்லது கேட்க வேண்டும். அல்லது அந்த புராட்டஸ்டண்ட் கிறிஸ்துவப் பெண்மணி இறங்கிப் போக வேண்டும். அவள் வண்டி ஏறும்போதே அமேயர் பாதிரியாரை இளக்காரத்தோடல்லவா பார்த்தாள்? அவர் வாடிகனுக்கு இறை ஊழியம் செய்யப் புறப்படப் போகிறார் என்று தெரிந்தால் அவளுக்கு மரியாதை வருமோ? போப்பையே மதிக்காத கூட்டம் இல்லையோ அவளுடையது? அவளுக்கு முன்னால் நடந்து போய்க் கதவு திறந்து கழிப்பறையைப் பயன்படுத்துவது போல தரங்கெட்ட ஒரு செயல் இருக்க முடியுமா? வாடிகனில் கழிப்பறைகள் எப்படி இருக்கும்? வேண்டாம் அது.

 

டிக்கட் பரிசோதகரும், ரயிலின் ஆட்டத்தோடு சேர்ந்து ஆடி, அதிகமாக கொனஷ்டை பண்ணிக் கொண்டு ஒரு இளம் பெண்ணும் ரயில் பெட்டிக்குள் வந்துன்அந்த ஆப்பிரிக்கப் பெண்ணுக்கு எதிரில் நின்றார்கள்.  டிக்கெட் பரிசோதரோடு வந்த பெண் கழுத்தில் மாட்டியிருந்த திறந்த பெட்டியில் குளிர் பானங்களும், பியர் தகர உருளைகளும் இருந்ததை இங்கே இருந்தே பார்த்த முசாபிர், குளிர வைத்த பெல்ஜியம் பியர் கிடைக்கும் என்றான் உற்சாகமாக.

 

வேண்டாம், அதை நினைத்தால் அமேயர் பாதிரியாருக்கு இன்னும் சிரமமாகப் போகும். பாழும் வயிறும் சிறுநீரகமும் இப்படியா பழி வாங்கும்?

 

டிக்கெட் பரிசோதகர் ஏதோ சொல்லித் தலையை அப்படியும் இப்படியுமாக ஆட்டினார். பானங்களைச் சுமந்து வந்த இளம்பெண் சுவாரசியமான காட்சியைக் காணும் ஆர்வத்தோடு பெட்டியில் இருந்து ஒரு சூயிங் கம்மையோ வேறேதோ ஒன்றையோ காகிதம் உரித்துக் கீழே போட்டு, வாயில் இட்டுச் சவைக்க ஆரம்பித்தாள்.

 

அவளை நோக்கி, பியரைக் கொடுத்துட்டு போ என்று சைகை செய்தான் முசாபர், பெண்டாட்டிக்குத் தங்கை, அக்கா என்று மச்சினியிடம் உரிமை எடுத்துக் கொள்கிற மாதிரி. அவளும், இதோ வரேன் கண்ணா, எனக்காகக் கொஞ்சம் பொறு என்ற தோதில் ஒரு முத்தத்தை முசாபரை நோக்கிப் பறக்க விட, அமேயர் பாதிரியார் எல்லோருக்கும் நல்ல புத்தி வர வேண்டிக் கொண்டிருந்தபோது கடந்து போன பெரிய வாய்க்காலைப் கண்டார்.

 

வேண்டவே வேண்டாம், இனியும் நேரம் கடத்த முடியாது. புராட்டஸ்டண்ட் கிழவிகள், முத்தம் பறக்க விடும் யுவதிகள் சேரும் அதே நரகத்துக்குப் போகட்டும். அவர்களைச் சங்கடப்படுத்துவது ஒன்றும் பாவ காரியமில்லை.

 

அவர் பக்கத்தில் தான் ஏசு இருக்கிறார். எல்லாம் ஜெயம் உனக்கு என்கிறார். டிக்கெட் பரிசோதகர் ஒரு தடவை மென்மையாக, மற்ற முறை உரக்க, மறுபடி மென்மையாக என்று மாற்றி மாற்றிச் சொல்லி புராட்டஸ்டண்ட் பெண்மணி பக்கம் அசையாமல் நிற்க அவள் எல்லோரையும் திட்டிக் கொண்டும், திரும்பிப் பார்த்து கத்தோலிக்க அமேயர் பாதிரியாரைத் திடமாகச் சபித்துக் கொண்டும், கீதம் ஒன்றை அபசுவரமும் குரல் பிசிறலுமாகப் பாடிக் கொண்டும் கம்பார்ட்மெண்டை விட்டு இறங்கிப் போனாள்.

 

உயர்நிலைப் பள்ளியில் எனக்கு நாலு வகுப்பு கீழே படிச்சிட்டிருந்தா கொச்சு தெரிசா. ரொம்ப அழகான ஆட்டுக்குட்டி அவ அப்போ. அப்பவே அவ மேல் நேசமாச்சு.

 

முசாபர் பழைய சினிமாப் படத்தில் வசனம் சொன்ன பாணியில் பேசிக் கொண்டிருந்தான்., ஹதிம் தாய் அல்லாத பழைய திரைப்படம் அது. பிரஞ்சில் இருப்பதால் அந்த மொழியில் காதலிப்பார்கள். பிரஞ்சில் சிறுநீர் கழிப்பார்கள்.

 

போதும், இப்போது நடக்கலாம். எழுந்து நின்றார்  அமேயர் பாதிரியார்.

 

அவர் முசாபரிடம் தன்னை மன்னிக்கும்படி இரைஞ்சி, டாய்லெட்டுக்கு நடக்க, டிக்கெட் பரிசோதகர் இவர்கள் இருக்கைகளை நோக்கி வந்தார். கூடவே அந்த பியர் விற்கும் பெண்ணும்.

 

கிளம்பிய வேகத்தில் இருக்கைக்குத் திரும்பினார் அமேயர் பாதிரியார். டிக்கெட்டைப் பரிசோதித்த பின்னர் தான் மற்றதெல்லாம். சிறுநீர் கழிப்பதை நினைக்கக் கூடாது. வேறே எதை நினைப்பது?

 

ஏன், நினைத்துச் சலிக்க அந்த டயோசிஸ் கடிதமே போதுமே. அமேயர் பாதிரியார் அவர் மேல் உள்ள குற்றச்சாட்டுகளுக்குத் தக்க விதத்தில் விளக்கம் அளித்துத் தான் குற்றமற்றவர் என்று ஒரு விவரமான கடிதம் எழுதி, அது ஏற்றுக் கொள்ளப் பட்டதும் வாடிகன் போகலாம் என்று அறிவுறுத்தி வந்த கடிதம்.

 

வேற்று மத வளர்ச்சிக்கு வெளிநாடான இந்தியாவில் உழைத்தது, இறை ஊழியத்தை உள்ளூரில் புறக்கணித்து சுற்றித் திரிந்தது என்று அவர் செய்யாத குற்றம் எல்லாம் பட்டியல் போட்டதோடு, ஆடும் பறவை என்ற சாத்தானின் மயக்கும் உருவப் பாவத்தை இங்கே கொண்டு வந்து ஊரைப் பயமுறுத்தியதும் அவர் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு.

 

அதற்குத் தகுந்த பதில் எழுத வாடிகனிலேயே இருக்கும் தெக்கே பரம்பில் பாதிரியார் உதவி செய்ய இருக்கிறார். மிகப் பெரிய, நூறு பக்கம் வரை வரும் கடிதத்தை அமேயர் பாதிரியார் டயோசிஸுக்கு சமர்ப்பிப்பார்.

 

அடுத்த மாதம் அவர் வாடிகனுக்குப் போகும் போது குற்றம் சொன்னவர்களே வந்து மரியாதை செய்து வழியனுப்புவார்கள். வாடிகனில் அவருக்கு, இதோ எதிரில் நிற்கும் பெண் சுமந்து வந்திருப்பவை போன்றா நல்ல குளிர் பானங்கள் தடையின்றிக் கிட்டும். வேண்டாம். இந்தாருங்கள் என் டிக்கட்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன