வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுப்பில் நான்காவது நாவல் இது. நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி கீழே தொடர்கிறது-
மூன்றில் ஒருத்தர் பிரஞ்சுக் காரர் இல்லையோ? மிகச் சரிதான். பிரஞ்சுக் காரர்களுக்கும் காலம் காலமாக இங்கிலாந்து பேரரசு இங்கிலீஷ் சொல்லிக் கொடுத்து, இங்கிலீஷ் பண்பாட்டைப் போதித்து வருகிறது. சதா பெண்களோடு சிருங்காரம் பாராட்டுவதிலும், கெட்டுப் போன ஒயினும், முந்தாநாள் சாப்பிட்ட மீனும் உலர்ந்து துர்வாடை அடிக்கும் அவர்களின் வாய்க்குள் நாவு நுழைத்து முத்தம் கொடுப்பதிலும் மட்டுமே சிரத்தை கொண்ட பிரஞ்சுக் காரர்களுக்கு இங்கிலீஷ் வரவேயில்லை.
ஆல்பர்ட் பிரபுவுக்கு பிரஞ்சுப் பெண்களின் வாய் நாற்றம் அனுபவம் உண்டு, மாளிகையில் அவ்வப்போது வேலைக்கு வந்த பிரஞ்சு பணிப்பெண்களுக்கு அவரும் பிரஞ்சு முத்தம் கொடுத்துப் பெற்றிருக்கிறார். அவர்கள் குளிக்கச் சோம்பல் பட்டவர்கள். அந்த உடல்வாடைக்கே அவருக்கு மீண்டும் உடல் எடுக்க ஆசை.
கிடக்கட்டும். இந்த பிரஞ்ச் பாதிரியாருக்கு சிநேகிதிகள் இருக்க மாட்டார்கள் என்பதால் அவருடைய இங்கிலீஷ் அறிவு சொல்லும் தரத்தில் இருக்கக் கூடும்.
இப்படியான சிந்தனைகளோடு நகர்ந்து, முதல் அறைக்குள் எட்டிப் பார்த்தார் ஆல்பர்ட் பிரபு. மேசை மேல் உடம்பைக் குறுக்கிக் கொண்டு கருப்பன் உறங்கிக் கொண்டிருந்தான். இவன் போன முறை பார்த்தபோது முட்டக் குடித்து விட்டு இந்தக் கென்ஸிங்டன் வீட்டுப் படியேறி இருந்தான். இப்போது குடித்தானா என்று தெரியவில்லை. ஆனால் உறக்கத்தில் புலம்பிக் கொண்டிருக்கிறான்.
ஆல்பர்ட் பிரபு உள்ளே நுழைந்து அவன் தலையில் கை வைத்தார். இது பனிக்கட்டியைக் கவசம் செய்து தலையில் கவிழ்த்தாற்போல் ஒரு குளிரை உடலெங்கும் பரவ வைக்கும். அவன் எழுந்து உட்காரட்டும். சத்தம் போடுவானோ தெரியவில்லை. என்றால், ஆல்பர்ட் பிரபுவுக்கு சத்தம் உகந்ததில்லை.
தெரிசா நீ மன்னிக்க நேரம் வந்திருக்கு. என்னை மன்னிச்சுடு தெரிசா.
ஆசியக் களையுள்ள அவன் யாரிடமோ எதற்கோ மன்னிக்கச் சொல்லி நல்ல இங்கிலீஷில் மன்றாடுகிறான். அவனுடைய வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்ற வந்த சேடியோ? அவள் பிரஞ்சுக்காரியாக இருப்பாளோ?
அவன் எழுந்து உட்கார்ந்து கண்ணை மூடியபடியே ஆல்பர்ட் பிரபுவின் புகை வடிவெடுத்த கை மேல் தன் கரத்தை வைத்து இன்னொரு முறை அழும் குரலில் சொன்னான் –
உன் மேலே பிரியம் இருந்த காரணத்தாலே தான் இதைச் சொல்லாமலேயே இருந்துட்டேன். நான் செஞ்சது தப்பு தான் கொச்சு தெரிசா. என்னை மன்னிக்கணும் நீ.