வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காம் நூல். அதிலிருந்து –
அவன் இந்திய பாணியில் இரு கரம் கூப்பிக் கும்பிட்டுக் கேட்டான் –
துரையவர்கள் யாருன்னு புலப்படலே. அமேயர் பாதிரியாருக்கு உறவா?
பாதிரியாருக்கு எப்படி உறவு இருக்க முடியும்?
மன்னிக்கணும்.
அதைச் சொல்லியாச்சு.
ஆமா, ஆனா உங்க கிட்டே சொல்லலே. கொச்சு தெரிசா கிட்டே சொன்னேன்.
நான் கேட்டதாலே, என்கிட்டே சொன்னதாகவும் அர்த்தமாகும்.
அப்படியா?
அப்படித்தான்.
நீங்க பாதிரியார்னே வச்சுக்கட்டா?
எதுக்கு?
நான் பாவம் செஞ்சுட்டேன்.
பாவத்துக்கும் பாதிரியாருக்கும் என்ன சம்பந்தம்?
அவர் தான் பாவியை மன்னிப்பார்.
அது பாவம் இல்லேன்னா?
அதையும் அவர் தான் சொல்லணும்.
நீ என்ன பாவம் செஞ்சே?
நீங்க பாதிரியாரா இருக்கத் தயார்னா சொல்றேன்.
நான் நானூறு வருஷமா எதுவுமாகவும் இல்லே.
பரவாயில்லே, இந்த நிமிஷத்திலே இப்படி வந்து பேசிட்டு இருக்கீங்களே. இது போதும்.
பாவ மன்னிப்பு கேட்க நீ என் பார்வையிலே படும் மாதிரி இருக்கக் கூடாது. எனக்குக் கண் இல்லேன்னாலும் பார்க்கறேன்.
சரி நான் அடுத்த அறையிலே போய் அங்கே இருந்து பாவம் சொல்லட்டா?
அங்கே போய்க் கூச்சல் போட்டா வீட்டுலே, அடுத்த வீட்டுலே, தெருவிலே எல்லாரும் என்னன்னு கேட்டு வந்துடுவாங்க.
அங்கே எக்ஸ்டென்ஷன் ஃபோன் இருக்கே, அதுலே இருந்து பேசட்டுமா? நீங்க இங்கே எடுத்துக் கேட்கலாம்.
என்னாலே அந்த கருவியை எல்லாம் இயக்க முடியாது. நான் இருந்த போது அது இல்லை.
அப்போ நான் இப்படி கண்ணை மூடிக்கிட்டே உங்க கிட்டே சொல்றேன். நீங்க மன்னிச்சுடுங்க.
கேட்க முந்தி எப்படி மன்னிப்பேன்னு சொல்ல முடியும்?
மன்னிப்பை எதிர்பார்த்துத் தானே சொல்றது?
அது பாதிரியார்களுக்கு.
நீங்க இப்போ எனக்காக இந்த நிமிஷம் அப்படி இருங்க.
எனக்கு லத்தீன் மொழி தெரியாது. மன்னிப்பை லத்தீனில் தானே வழங்கணும்?
லத்தீனில் பாவ மன்னிப்பு தருவாங்கன்னு எனக்குத் தெரியாதே.
நீ அப்போ இதுவரை பாவம் செஞ்சதில்லை, அப்படியா?
இல்லே, இதுவரை மன்னிப்பு கேட்டதில்லை.
நீ கிறிஸ்துவன் தானே?
இல்லை, மற்ற மதம்.
அப்போ எதுக்கு மன்னிப்பு எல்லாம்?
பாவம் யார் செஞ்சாலும் கேட்கலாமே?
அதுக்கு பாதிரியார் எதுக்கு?
நீங்க தான் பாதிரியார் இல்லையே.
அவன் காரியமாகச் சொல்ல, ஆல்பர்ட் பிரபு சத்தம் எழுப்பாமல் சிரித்தார்.