அன்பு நண்பர் கல்யாண்ஜி வண்ணதாசன் எழுதுகிறார் –
//நீங்கள் ‘ஹிந்து’ தினசரி வாசிப்பவர் என்றால், நீங்கள் இதற்குள் அந்தப் புகைப்படத்தைப் பார்த்திருப்பீர்கள். ‘சினிமா ப்ளஸ்’ இணைப்பின் முதல் பக்கத்தில் உங்களைச் சிதற அடிக்கிற முகங்களுடன் ‘குத்தவைத்து’ உட்கார்ந்திருக்கிற அந்த நூறு முகங்களை. பாலாவின் ‘பரதேசி’ திரைப்பட ‘ஸ்டில்’களுள் ஒன்றான அது, தன்னிடம் நாற்பதுகளின் காலத்தில் எடுக்கப்பட்ட ஆல்பத்தில் இருந்து ஒரு இலையை உருவி நமக்கு முன் வைத்திருக்கிறது. பாலா திரைமொழியிலும் அது சார்ந்த உடல்மொழியிலும் எவ்வளவு அக்கறை சார்ந்தவன் என்பதற்கு இந்த அத்தனை முகங்களும் உட்கார்ந்திருக்கிற தோற்றமும் கைகளைப் பூட்டியிருக்கிற, முகங்களை உயர்த்திய, தோள்ப்பட்டைகள் ‘தென்னிய’ நிலைகளை,இரண்டாவது வரிசைக் கிழவர் இருவரின் தாடி அளவுக்கு வாழ்வு நரைத்திருக்கிற முன் வரிசையில் உள்ள ஏழெட்டுச் சிறுவர்களைப் பார்த்தாலே போதும். டு.எல்லோர் முகத்திலும் எரிகிறது பனிக்காடு.//
என் கருத்து
——————–
பாலாவின் திரைப்படப் புகைப்படத்தைப் பார்த்ததும் எனக்கு உடனடியாக நினைவு வந்தது இந்தப் பழைய புகைப்படம் தான்,
நிலப் பிரபுத்துவத்தின் கடைசிக் கண்ணிகள் இற்று விழும் 20-ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தைக் காட்டும் நிஷாந்த் (இரவின் முடிவில்) என்ற ஷியாம் பெனகலின் அற்புதமான படம்.
பிரபுத்துவக் குடும்பத் தலைவராக அம்ரிஷ் பூரி, அவருடைய இளைய சகோதரர்களாக அனந்த் நாக், நசிருத்தீன் ஷா, அம்ரிஷ் பூரி சகோதரர்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட கிராமத்துக்கு வரும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கிரிஷ் கர்னாட், அவர் மனைவி ஷாபனா ஆஸ்மி, கர்னார்டின் தோழரும் கோவில் பூசாரியுமாக நிஷாந்த் படத்தின் கதை-வசனம் எழுதிய மராத்தி நாடக அரங்கின் முக்கிய எழுத்தாளரான சத்யதேவ் துபே என்று அழுத்தமான பல பாத்திரங்கள்.
ஷபனா ஆஸ்மியைக் கவர்ந்து போய் அம்ரிஷ் பூரி சகோதரர்கள் பெண்டாள, கிராமம் பெட்டைப் புலம்பல் புலம்பும். கடைசியில் அவர்கள் ஓர் அணியில் திரண்டு அம்ரிஷ் சகோதரர்களை ஊரை விட்டு ஓட்டுவார்கள். (ஷபானா கதாபாத்திரமும் சகோதரர்களில் இளையவரான நசிருத்தீன் ஷாவோடு ஓடிப் போவார்… மனித மனத்தின் விளங்காத செயல்பாடுகளில் ஒன்று இது).
இந்த அற்புதமான படத்துக்காக எடுத்த ‘keep sake’ புகைப்படம் இது. அம்ரிஷ் பூரியின் பண்ணையார் மிடுக்கு, உடல் மொழி, மற்ற நடிகர்களின் சாய்ந்தும் நிமிர்ந்தும் இருந்தும் நின்றும் உள்ள நிலை, அவர்கள் பார்வை… காலம் உறைந்த புகைப்படங்களில் இதுவும் ஒன்று.
வெறும் கருப்பு வெள்ளையாக இல்லாமல், செபியா டோனாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
அப்புறம் ஒண்ணு, கல்யாண்ஜி. பாலா படத்தில் naturalness கம்மி. எல்லோரும் கையைக் கட்டிக் கொண்டு regimentalize செய்ய்த மாதிரி ஒழுங்கமைதியோடு உட்கார்ந்து கொண்டு .. அவர்கள் வரிசை கலைந்து, இந்த நிமிடத்தில் என்ன செய்ய வேண்டும் என்று நிச்சயமில்லாமல் ஒவ்வொருவரும் ஒரு வித குழப்பத்தோடு இருந்திருப்பது தான் இயல்பு. பேசி வைத்துக் கொண்டு ஐயப்பன் போஸில் கையைக் கட்டிக் கொண்டு நண்டு சிண்டில் இருந்து வயசன்மார்வரை உட்கார்ந்திருப்பது கொஞ்சம் கொஞ்சம் போல் செயற்கை