ஆல்பர்ட் பிரபு இல்லாமல் போய் நானூறு வருஷம் கழித்தும் வேறு மொழியில் கவிதை இருக்கிறதாம். அவருக்குப் பரிச்சயமான இங்கிலீஷிலும் கொஞ்சம் வித்தியாசத்தோடு அது இருக்கும். கல்யாணம் ஆன பெண்களைக் காமுறும் கவிஞர்கள் ஏர்ல்ஸ் கோர்ட் மதுக்கடையில் பியர் அருந்தியபடி சின்னச் சின்னதாகச் சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள்.
மன்னிச்சு முடிஞ்சுது. நான் போகறேன்.
இன்னும் நான் பாவமன்னிப்பு கோர இல்லையே.
இதுவரை சொன்னது?
இது இரண்டாம் நிலை பாவம். Collateral sin.
முதல் கட்டம் என்ன?
பத்து வருஷம் முன்பு நான் டோரதியோடு தேன்நிலவு பிரான்ஸ் போனேன்.
புரியலே.
என் முந்திய மனைவி டோரதியோடு பாரீஸ் போனேன்.
உனக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆகி இருந்ததா?
ஆமா?
அந்த நிலையில் தான் இன்னொருத்தன் மனைவி பேரில் காதல் கவிதை எழுதினியா?
அதை நீங்க ஏற்கனவே மன்னிச்சாச்சு தானே?
சரி, வேறே என்ன மன்னிக்க இருக்கு?
நான் டோரதியோடு பாரீஸ் போனேன்னு சொன்னேனே.
அதை மன்னிக்க அதில் என்ன இருக்கு?
அவளோடு இருக்கும் போதும் அதாவது அந்தரங்கமாக இருக்கும் போதும் கொச்சு தெரிசாவை நினைத்துக் கொண்டிருந்தேன்.
மன்னித்தானது. அப்புறம்?
அவசரம் காட்டினார் ஆல்பர்ட் பிரபு. தெருவில் காலை நேரத்தின் ஓசைகள் உயர்ந்து கொண்டிருந்தன.
பாரீஸ்லே ஒரு சாலை விபத்தில் தெரு ஓரத்துச் சுவரில் என்னை அழுத்தி ஒரு ராணுவ வேன் மோதியது.
இது அசம்பாவிதம். வேன் ஓட்டுநர் தான் வருந்த வேணும்.
விபத்தில் என் உயிர்த் தலத்தில் அடி பட்டு இன விருத்தி செய்யும் ஆற்றல் அவிந்து போனது.
அனுதாபங்கள்.
அந்த விஷயத்தை கொச்சு தெரிசாவிடம் சொல்லாமலேயே அவளை மெட்காஃப் இறந்ததும் கல்யாணம் செய்து கொண்டேன்.
சரி அதுக்கு என்ன?
என்னவா? நான் பாவ மன்னிப்பு கேட்கிறேன்.
எதுக்கு?
சொல்லாமல் அவளை ஏமாற்றியது தப்பு இல்லையா?
எனக்குச் சரியாகத் தெரியவில்லை. எதற்கும் நீ அந்த ரெண்டு பாதிரியார்களிடம் நயமாக விசாரித்துப் பார். முறையற்ற காதலுக்கு உன்னை மன்னிப்பது மட்டும் நான் செய்தாகி விட்டது.
ஆல்பர்ட் பிரபு தீர்ப்பு வழங்கிய திருப்தியோடு வெளியேறும்போது கூடத்தில் கருப்பு இயந்திரம் தொடர்ந்து மணியடித்தது. எழுந்து, அதை எடுத்து ஸ்தோத்திரம் சொல்லிப் பேசினார் இந்தியச் சாயலுடைய பாதிரியார்.
அடுத்த சில நிமிடங்களில் அவர் மற்றவர்களை எழுப்பிக் கொண்டிருந்தார் –
எழுந்திருங்க. இது நற்காலையே தான். அமேயர் பாதிரியார் மேல் சுமத்தப்பட்ட எல்லா குற்றச்சாட்டுகளையும் வாதிக்கன் நிராகரித்திருக்கிறது. அமேயர் பாதிரியார் உடனே வாதிக்கனில் வந்து பணியில் அமரச் சொல்லி உத்தரவு.
பரிசுத்தரான அமேயர் பாதிரியார் முசாபர் உல்ஹக் ஸபரை மன்னிக்கட்டும்.
ஆல்பர்ட் பிரபு காற்று கடந்து போவது போல் தன் வீட்டுக்கு வெளியே மிதந்து வந்து எங்கும் படிந்து ஈரம் விதைத்துப் போன காலைத் தூறலில் கலந்து நகர்ந்தார்.