மும்பை பாண்டுப் சர்வமங்கள் சாலில் ஒரு கல்யாணம், ஒரு சாவு

வாழ்ந்து போதீரே -அரசூர் நான்காவது நாவலின் தலைப்பு. நாவலில் இருந்து  ஒரு மிகச் சிறிய பகுதி


மலா பாக ருபயீ த்யா, மோதா பாவு. அப்பன் காஹீ தூபா கரீதீ கரூ.

 

ஐந்து நிமிஷம் முன் டோம்பிவிலி ஃபாஸ்ட் லோக்கல் ரயிலில் வந்து சேர்ந்தவன், ரிடர்ன் டிக்கட்டை சிகரெட் பாக்கெட்டுக்குள் பத்திரப்படுத்தியபடி திலீப்பிடம் சொன்னான்.  ஐந்து ரூபாய் வேணுமாம். போய் நெய் வாங்கி வருவானாம்.

 

நாலு மூங்கில் கழிகளும் தென்னங் கிடுகுமாக சைக்கிளில் வந்த இன்னொருத்தன் வண்டி பிரேக் பிடிக்காமலோ, இல்லை விளையாட்டாகவோ கட்டிடச் சுவரில், சினிமா கதாநாயகி நடிகை நூதன் படம் ஒட்டிய போஸ்டரில் இடுப்புக்குக் கீழ் முட்டி நிறுத்தினான்.

 

ஒன்றும் இரண்டுமாக மூலத்தார் வேட்டி உடுத்தி, வெள்ளைக் குல்லா வைத்த நடுவயசு மராட்டியர்களும் இளைய ஆண்களும் உரக்கப் பேசியபடி வந்து கொண்டிருந்தார்கள்.

 

பாண்டுப் சர்வமங்கள் சாலில்  சாவுச் சடங்கு நடத்திக் கொடுக்க திலீபுக்கு ஒத்தாசையாக வருகிறவர்கள். அவர்கள் எல்லோரையும் திலீப் அறிவான். காமத் ஓட்டலில் சர்வர் விடுப்பில் போக டெம்பரவரியாக வடா பாவ் பார்சல் கட்டுகிறவர்கள்.  எச்சில் இலைகளை எடுத்து இரும்பு வாளியில் ரெண்டு பேராக நீளக் கயிறு கட்டித் தூக்கிப் போய் குப்பை குவிக்கும் பெருவெளியில் வீசி எறிந்து விட்டு பீடி புகைத்தபடி வருகிறவர்கள். விநாயக சதுர்த்திக்கு தாதரிலும் மடுங்காவிலும் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி விளாம்பழம் விற்கக் கடை போட்டு, பக்கத்து நடைபாதைக் கடைக் காரர்களால் வசவும் கேலியும் பெற்று பொருட்படுத்தாமல் வியாபாரம் செய்கிறவர்கள்.  தீபாவளிக்கு பெரிய முறங்களில் உள்ளூரிலோ மராத்வாடா பிரதேச கிராமங்களிலோ அபாயமில்லாத வெங்காய வெடி செய்து அனுப்புவதைப் பரத்தி அதே நடைபாதைகளில் ஒன்று இரண்டு வெடிகளைத் தரையில் எறிந்து பலமாக வெடித்து விற்பவர்கள்.  மகாலட்சுமி கோவில் வாசலில் செருப்பு டோக்கன் கொடுத்து காசு வசூலிப்பவர்கள். இல்லாத நேரங்களில் பிணம் தூக்குகிறவர்கள்.

 

எப்படியோ யார் மூலமோ தகவல் தெரிந்து சாவு விழுந்த மராட்டிய வீடுகளுக்கு எல்லாம் கிரமமாக நடத்திக் கொடுத்துப் பிணம் தூக்கிப் போக வந்து விடுகிறவர்கள். அவர்களை திலீப் வேறு இடங்களிலும் சந்தித்திருக்கிறான். அதெல்லாம் அவனும் போகக் கூடாத இடங்கள் தன். நல்ல வேளையாக அகல்யா வந்தாளோ அதை எல்லாம் விட்டு விலகி வந்தானோ.

 

பய்யா, பைசா கொடு. கொடுத்தாத் தான் நெய் வாங்கிட்டு வர முடியும்.

 

நெய் வாங்கக் காசு கேட்டவன் அண்டர்வேரோடு நின்று கால் சராயை மடித்து தோல்பையில் வைத்து கொண்டிருந்தான்.  மூலத்தார் வேட்டியை பக்கத்தில் இருந்தவன் தன் பையிலிருந்து எடுத்து நீட்டியபடி திலீபுக்காகப் பரிந்து வந்தான்

 

தருவான். அம்மாவைப் பறி கொடுத்த பிள்ளை. உனக்கு அந்த சோகம் தெரியாது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன