வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவது நாவல். சிறு பகுதி அதிலிருந்து:
திலீப் அவனை விழித்துப் பார்த்தான். எல்லோரும் அவனிடம் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். சினிமாவில் பார்த்தபடி, தொடர்கதையில் படித்தபடி, மேடை போட்டு நீட்டி முழக்கித் தலைவர்கள் பேசுவதைக் கேட்டபடி, எல்லாரும் எதிர்பார்க்கிற படி அவன் இப்போது அழுது புரண்டு கொண்டிருக்க வேண்டும். கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வடிந்து சட்டையை நனைக்க, விம்மி விம்மி அழ வேண்டும். பக்கத்தில் இருப்பவர்கள் தேற்றத் தேற்ற, அம்மாவைப் பற்றிய பழைய நினைவுகளில் மூழ்கி அதைத் திடுமெனத் தொடங்கும் மறு பாதியாக, நடுவிலிருந்து பிய்த்து எடுத்த ஒரு வார்த்தையாக, சொல்லத் தொடங்கி விம்மலில் கரைகிறதாக வெளியிட்டபடி இருக்க வேண்டும். எதுவுமே இல்லாவிட்டால், டர்க்கி டவலால் தோளைப் போர்த்திக் கொண்டு சூனியத்தில் பார்வை நிலைக்க விழித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும்.
அகல்யா, ஒரு வாய் காப்பி கொடு. தலையை வலிக்கறது.
வாசலுக்கு வந்த அகல்யா அவனைப் பார்க்க, திலீப் கேட்டான்.
அவள் அவனைக் கண்டிப்பது போல் உதட்டைச் சுழித்துக் காட்டி நெய் வாங்கப் போகிறவன் குறுக்கிட, சாவு நடந்த வீட்டு எஜமானியாக முகத்தை வைத்துக் கொண்டாள்.
அகல்யா தலையை இறுக்கமாக முடிந்தபடி அவசரமாக அவன் பக்கம் வந்தாள். வாழ்க்கை பூரா சர்வமங்கள் சால் குடியிருப்பில் இந்த மாதிரி சமாசாரங்களுக்கு நடுவே குடும்பம் நடத்தி, ஆபீஸ் போய் வந்து, தீபாவளியும் கணேஷ் சதுர்த்தியும் கொண்டாடி, ஞாயிறு பகல் பக்கத்துக் குடித்தனப் பெண்களோடு ஊர் வம்பு பேசி, வடா பாவ் வீட்டிலேயே செய்ய முயன்று கருகலும், எண்ணெய் முறுகலுமாக எதையோ செய்து முடித்துப் பகிர்ந்து சாப்பிட்டு, கூடிய மட்டும் சந்தோஷமாக இருக்கிற பெண். தமிழ்ப் பிராமணத்தியோ, மராத்திக் காரியோ இல்லை. பெண். எல்லா சூழ்நிலைகளிலும் தலையை உயர்த்தி இருந்து, நதியோடு போய், எட்டரை மணி டோம்பிவிலி-தாதர் லோக்கல் போய் விட்டதா என்பது போன்ற கவலைகள் தவிர வேறே இல்லாத பெண்.
எதிர்க் குடித்தனத்திலே டாங்க்வாலே மருமகள் ரேகா காப்பி போட்டுண்டு இருக்கா. வடா பாவ் வாங்கி வந்தது இருந்தது, அதையும் ஸ்டவ்லே தண்ணி விட்டு மேலே வச்சு சூடாக்கறா. ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு நான் உள்ளே இருந்து கூப்பிடறேன். நேரே டாங்க்வாலே ப்ளாட்டுக்குள்ளே போயிடுங்கோ.
ரேகா எல்லாம் கொடுப்பாள்னா சரி.
அகல்யா அவனை மகா ஆச்சரியத்தோடு பார்த்தாள். அம்மாவைப் பறி கொடுத்து விட்டு நிற்கிறவன், பெண்டாட்டியிடம் ஏடாகூடமாக அர்த்தம் வரும் ஜோக் சொல்லுவானா என்ன? அவனுடைய சிந்தனையும் நினைவும் எல்லாம் ஈசுவரனிலும், உயிர் துறந்த ஆத்மாவை நற்கதிக்குக் கொண்டு செலுத்த இயன்றதைச் செய்வதிலும் அல்லவா இருக்கும்.