வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவது -சிறு பகுதி
வார்ட் பிரமுகர் மிட்டாய்க்கடை கதம் இந்தத் துக்கச் செய்தியைக் கேட்டு ஓடி வர வேணாமா?
ஓரமாகச் சுவரில் சாய்ந்து நின்று சிகரெட்டை ஊதிக் கொண்டிருந்த பிரக்ருதியை ஓடச் சொன்னான். அவனும் மகாராஜா உத்தரவு கொண்ட சிப்பாய் போல் சிட்டாகப் பறிந்தான்.
இந்தப் பயல்கள் எல்லோருக்கும் கணிசமாக, எல்லாம் முடிந்து போகும்போது கொடுக்க வேண்டும் என்று தெரியும். சகலத்துக்கும் செலவாகப் போகிற பணத்துக்கு என்ன செய்வது? பெரியம்மா சலுகை காட்ட, பிஸ்கட் பன்றி மனசே இன்றி அனுமதித்த நாலாயிரம் ரூபாய் கைவசம் உண்டு. அது போதுமா? அதுவும் இதெல்லாம் ஒரு நாள் காரியம் இல்லையே. தமிழோ, தெலுங்கோ, மராத்தியோ, பத்து நாளும் அதற்கு மேலும் இல்லையா ஏதேதோ வைதீகமும், விருந்துமாக முழங்குமே.
அவனுக்கு விசித்திரமாக இருந்தது. சொந்த அம்மா இறந்து போய் இப்படி அதைப் பற்றித் துக்கமோ வருத்தமோ இல்லாமல், மூன்றாம் மனிதன் மாதிரி, அதை அருகே இருந்து பார்த்து அனுபவப்படும் இழவாக மட்டும் எடுத்துக் கொள்ள எப்படி மனம் வந்தது? அடிப்படையிலேயே ஏதோ தவறு அவனிடம்.
இறப்பு சர்ட்டிபிகேட் வாங்கி வந்துடலாமா?
யாரோ கேட்டார்கள். நல்ல விதமாக உடுத்து, சட்டையைக் கால் சராய்க்குள் நுழைத்து கச்சிதமாக இடுப்பு வார் கட்டி இருந்தவர். டை மட்டும் தான் குறைகிறது. இருந்தால் பிஸ்கட் சாஸ்திரிக்கு சகலபாடி போல இருப்பான்.
நாசுக்கான, மேல் மட்டத்தில், அதிகாரப் பெரும் பரப்பில் நடத்தித் தர வேண்டிய காரியங்களைச் செய்வதே எனக்கு வேலை.
வந்தவன் சொன்னான். ஆக, மற்றவர்கள் மூலக் கச்சம் உடுத்தி திலீப்புக்கு சகாயம் புரிய வந்தால், நன்றாக உடுத்தி வேறே மாதிரி உதவி செய்ய வந்தவன் இவன். விரட்ட மனம் இல்லை. இவன் வகையில் நாலாயிரத்தில் ஆயிரமாவது போகலாம். போகட்டும். சாவு சர்டிபிகேட் இல்லாமல் எப்படி மயானத்தில் எரிப்பது?
முன்பணமாக அவனுக்கு இருநூறு ரூபாய் எடுத்துக் கொடுத்து, இன்னொரு எடுபிடிக்கு பதினைந்து ரூபாய் எண்ணிக் கொடுக்கும்போது உள்ளே இருந்து அகல்யா குரல். போனான்.
வேகமா சாப்பிடுங்கோ. அங்கே அம்மா தகனத்துக்குப் போறதுக்காகக் கிடக்கா. இங்கே என்னடான்னா வந்த மூதேவியும் வீட்டுப் பிள்ளையாண்டனும் கொண்டா கொண்டான்னு கொட்டிண்டிருக்கான்னு மூணு பாஷையிலே சொல்வா.
அவன் காதில் மட்டும் படச் சொல்லி முன்னால் நடந்தாள்.
வடாபாவை வாயில் திணித்துக் கொண்டிருந்தபோது அங்கேயே தேடி வந்த அகல்யாவின் அப்பா, மாப்பிள்ளை என்ன இப்படி ஆகிப் போச்சே என்று உலகத்துத் துக்கம் எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டி நிறுத்தி திலீப்பிடம் விசாரிக்கும் குரலில் கேட்டார். போய்ட்டா என்றான் அவன் சகஜமாக.
எச்சில் கையை கால்சராயில் துடைத்தபடி வெளியே வர, ஒரு வேன் வந்து நிற்பது கண்ணில் பட்டது. கூட்டமாக யாரோ வந்து கொண்டிருக்கிறார்கள்.