வாழ்ந்து போதீரே -அரசூர் நாவல் வரிசையில் நான்காவது -நாவலின் அடுத்த சிறு பகுதி
ஓடி, வாசலில் போய் நின்றான். எடுபிடிகள் காந்தி குல்லாவை நேராக்கிக் கொண்டு அவனுக்கு முன்னால் நகர்ந்தார்கள்.
வேனிலிருந்து மெல்ல இறங்கி வந்து கொண்டிருப்பவர்கள் நகரத்துக்கு வெகு தூரம் வெளியில் இருக்கும் புறநகரப் பிரதேசங்களில் இருந்து வரும் பழைய லாவணி கலைஞர்கள். அம்மா செயலாக இருந்தபோது அவர்களில் பலரும் வீட்டுக்கு வந்து போனதை திலீப் மறக்க மாட்டான்.
கிராமத்துக் கலைகள் எல்லாம் நசித்துக் கொண்டிருக்க, அந்தக் கலைஞர்கள் சாயாக் கடை வைத்தும், தெருத்தெருவாக பன்னும் பிஸ்கட்டும் சைக்கிளில் கட்டி எடுத்துப் போய் விற்றும், தலையணைக்குப் பஞ்சு அடைத்துக் கொடுத்தும் ஜீவித்துக் கொண்டிருப்பவர்கள். சொற்பமான பெண்கள் இவர்களில் உண்டு. எச்சில் தட்டு அலம்பி, வீட்டு வேலை செய்தும், ஆஸ்பத்திரியில் ஆயாவாக பீத்துணி துவைத்தும், சித்தி வினாயகர் கோவில் வாசலில் ஜவந்திப்பூ மாலை விற்றும் வயிறு கழுவுகிறவர்கள். அம்மாவுக்கு வேண்டியவர்களான அவர்களைப் பார்க்க, திலீபுக்கு மனம் நிறைந்து வந்தது.
அவர்கள் ஓவென்று குலவையிட்டுக் கொண்டு வந்தார்கள். அம்மாவின் சடலத்துக்கு அருகே நின்றும் அமர்ந்தும் லாவணிப் பாடல்களைக் குரலெடுத்துப் பாடினார்கள். ஓரிருவர் சுவரில் மோதாமல், ஷாலினிதாய் உடலில் படாமல் சுவடு வைத்து நடனமும் ஆடினார்கள். ஒரு மகத்தான கலைஞருக்கு மற்ற கலைஞர்கள் செய்யும் மரியாதை மட்டுமில்லை, நிகழ்ந்து ஏறக்குறைய நிறைவாக முடிந்த வாழ்க்கைக்கான ஒரு கொண்டாட்டமாகவும் அது இருந்தது என்பதை திலீப் கவனித்தான்.