அகல்யா மறுபடி ஓடி வந்தாள்.
பாட்டி ஒண்ணும் சாப்பிட மாட்டேங்கறா. ரேகா கிட்டே சொல்லி ஒரு ஈடு இட்லி வார்த்து வச்சிருக்கு. ஒண்ணாவது கழிச்சு சிராங்காய் காப்பி குடிங்கோன்னா மாட்டேன்னு அடம். அவ தான் போயிருக்க வேண்டியவளாம். உங்கம்மா பாவம், தானே போய்ச் சேர்த்துட்டாளாம். நீங்க ஒரு வார்த்தை சொல்லி சாப்பிடச் சொல்லுங்கோ.
போனான். பழைய பட்டுப் புடவை வாடையடிக்க கற்பகம் பாட்டி சமையல்கட்டுக் கதவில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். தளர்ந்து தான் போயிருந்தாள். ஒரு மத்தியதர மேல்தட்டுக் குடும்பத்தைத் தன்னந்தனியாகத் தாங்கி நிறுத்திய மனுஷி, பாம்பே அழுக்கு சாலில் ஊழியம் செய்து தேய்ந்து போன தளர்ச்சி. அவளுடைய வேர்களை விட்டு அகற்றி நட்டு வேடிக்கை பார்க்கிறதாகத் திலீப் உணர்ந்தான். இவளை இனி எங்கே இருத்த வேண்டும்? பெரியப்பா வீடு? அகல்யா கவனித்துக் கொள்ள மாட்டாளா? எத்தனை நாள்?
ஒரு விள்ளல் இட்லியும், ஒரு மடக்கு காப்பியும் அவளுக்கு ஊட்டி விட ரெண்டு பேர் கண்ணிலும் கண்ணீர். அம்மாவுக்கு அழவில்லையே என்று மனதில் ஆதங்கம் சூழ, திலீப் கீழே வந்தான்.
மேக மூட்டமாக இருந்தது. பறவைச் சத்தம். காக்கைகள் அவசரம் என்று குரல் விட்டு, விருட்டென்று மறைய, பழைய கட்டிடங்கள் எழுந்து நிரம்பிய குறுகிய தெருவில் உயரப் பறந்து ஒரு மயில் வந்தது. இன்னொரு மயில், கூட இன்னும் ஒன்று, அடுத்து ஒன்று என மொத்தம் நாலு மயில்கள்.
தாழ இறங்கிய அவை, கட்டத் தொடங்கி இருந்த மூங்கில் பல்லக்குக்கு அருகே நின்றவர்களைச் சிறகடித்து அகற்றிக் கிடைத்த வெளியில் ஆடத் தொடங்கின.
யாரும் எதுவும் பேசவில்லை. புகைக்கவும், சிறுசொல் சொல்லவும் மறந்து அனைவரும் அந்தக் கம்பீரமான அழகில் லயித்துப் போயிருந்தார்கள்.
ஷாலினிதாய்க்குப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை என்பதில் திலீப்புக்கு வருத்தம் மேலெழுந்து வந்தது.
கார் வந்து நிற்கிற சத்தம். இல்லை. அது ஒரு ஜீப். உள்ளே இருந்து குதித்த முதல் பாதுகாப்புக் காவலர் தரை வழுக்கிச் சரிந்தார். காந்தி குல்லாய் எடுபிடிகள், கெட்ட வார்த்தை வசவோ, வலியால் கத்துவதோ, கடவுளை அழைப்பதோ எதையோ மெல்லிய, தீனமான குரலில் சொல்லிய அவரைப் பத்திரமாகத் தூக்கி நிறுத்தினார்கள். உயரமான, கிளிமூக்கு கொண்ட நபர். மலைப் பிரதேசத்தில் இருந்து வந்தவராக இருக்கும் என்று திலீப் நினைத்தான்.,
ஜீப்பில் வந்த மற்றவர்கள் மெல்ல இறங்கித் துப்பாக்கி பிடித்து நிற்க, சைரன் முழங்கி வந்து நின்ற காரில் இருந்து வெளிப்பட்ட, கையில் ஃபைல் வைத்திருக்கும் அதிகாரிகள், சந்திர மண்டலத்தில் நடக்க உத்தேசிப்பது போல் நடந்தார்கள். அடுத்து வந்த காரில் இருந்து திலீப்பின் மினிஸ்டர் பெரியப்பா இறங்கினார்.
அவர் எல்லோரையும் பார்த்து, உறைந்த புன்னகையோடு கை கூப்பினார். மயில்கள் அது பாட்டுக்கு ஆடிக் கொண்டிருக்க, உள்ளே இருந்து வந்த லாவணிக் கலைஞர்கள் குல்லா கையில் எடுத்து வணக்கம் சொன்னார்கள்.
சாவு வீட்டுக்கு, அதுவும் சொந்த சகோதரனின் மனைவி இறந்து போன துக்கமான நிகழ்வுக்கு வந்திருக்கிற நினைவு வந்தோ என்னவோ பெரியப்பா உதடுகளைக் கோணி சிரிப்பை அழித்தபடி, துக்கம் தாங்காது போனது என்பது போல் தலையைத் தொடர்ந்து இடம் வலமாக ஆட்டியபடி வந்தார்.
Sep 26 2024