ஆடி ஆடித் துக்கம் கரைக்க புறநகர் கடந்து பறந்த மயில்கள்

’வாழ்ந்து போதீரே’ அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவது. அதிலிருந்து அடுத்த சிறு பகுதி


கார் வந்து நிற்கிற சத்தம். இல்லை. அது ஒரு ஜீப். உள்ளே இருந்து குதித்த முதல் பாதுகாப்புக் காவலர் தரை வழுக்கிச் சரிந்தார்.  காந்தி குல்லாய் எடுபிடிகள், கெட்ட வார்த்தை வசவோ, வலியால் கத்துவதோ, கடவுளை அழைப்பதோ எதையோ மெல்லிய, தீனமான குரலில் சொல்லிய அவரைப் பத்திரமாகத் தூக்கி நிறுத்தினார்கள். உயரமான, கிளிமூக்கு கொண்ட நபர். மலைப் பிரதேசத்தில் இருந்து வந்தவராக இருக்கும் என்று திலீப் நினைத்தான்.,

 

ஜீப்பில் வந்த மற்றவர்கள் மெல்ல இறங்கித் துப்பாக்கி பிடித்து நிற்க, சைரன் முழங்கி வந்து நின்ற காரில் இருந்து வெளிப்பட்ட, கையில் ஃபைல் வைத்திருக்கும் அதிகாரிகள், சந்திர மண்டலத்தில் நடக்க உத்தேசிப்பது போல் நடந்தார்கள். அடுத்து வந்த காரில் இருந்து திலீப்பின் மினிஸ்டர் பெரியப்பா இறங்கினார்.

 

அவர் எல்லோரையும் பார்த்து, உறைந்த புன்னகையோடு கை கூப்பினார். மயில்கள் அது பாட்டுக்கு ஆடிக் கொண்டிருக்க, உள்ளே இருந்து வந்த லாவணிக் கலைஞர்கள் குல்லா கையில் எடுத்து வணக்கம் சொன்னார்கள்.

 

சாவு வீட்டுக்கு, அதுவும் சொந்த சகோதரனின் மனைவி இறந்து போன துக்கமான நிகழ்வுக்கு வந்திருக்கிற நினைவு வந்தோ என்னவோ பெரியப்பா உதடுகளைக் கோணி சிரிப்பை அழித்தபடி, துக்கம் தாங்காது போனது என்பது போல் தலையைத் தொடர்ந்து இடம் வலமாக ஆட்டியபடி வந்தார்.

 

கொங்கணிப் பெண்மணியின் முலைகள் நடுவே முகம் புதைத்து இப்படித் தலையசைய நேரு நினைவுகளை அவர் கெல்லி எடுத்துக் கொண்டிருந்தது திலீபுக்கு நினைவு வந்தது.

 

சாவு வீட்டில் நல்ல சிந்தனைகளே உன்னைச் சூழ்ந்திருக்கட்டும் என்று மயில்கள் அவனைப் பார்த்துச் சொல்லியபடி ஆடின.

 

அதுகளை யாராவது ஓட்டுங்கோ. கண்ணைக் குத்தி வைக்கப் போறது. நேரம் காலம் தெரியாம அது பாட்டுக்கு ஆடறது.

 

பெரியப்பா ஜாக்கிரதையான இந்தியில் சொன்னார். தில்லி புதுத் துரைத்தனத்து மொழி. லாவணிக் கலைஞர்கள் புரிந்து கொண்டு தலை ஆட்டினார்கள்.

 

அது போயிடும் சாப். மெல்ல கை அசைச்சா போதும்.

 

நாலைந்து பேர் கை அசைத்துக் கால் மாற்றி நின்று முன்னால் சென்று மீள, போங்கடா என்று அதுகள் பாட்டுக்கு ஆட்டத்தைத் தொடர்ந்தன.

 

அப்சரா ஆளி.

 

கூட்டமாக அவர்கள் பாடத் தொடங்கினார்கள். பூம்பூம் என்று முழங்கிய சாவுச் சங்குகள் குரல்களோடு கலந்து ஒலித்தன.  வரட்டியில் பற்ற வைத்த அக்னி சாவு வாடையை விருத்தி செய்து கொண்டு பற்றிப் படர இன்னொரு வரட்டியைக் குல்லாய்க் காரன் ஒருத்தன் தரையில் இட்டான்.

 

மயில்கள் ஒரு வினாடி நின்றன. போகலாம் என்று யாரோ சொன்னது போல் அவை ஒரே நேரத்தில் இறகு வீசிப் பறந்து மேலே உயர்வதை திலீப் பார்த்தான். அவன் மனதுக்குள் அவற்றுக்கு நன்றி சொல்ல, அம்மா போகுமிடத்துக்கு அவளுக்குத் துணை உண்டு கவலைப் பட வேண்டாம் என்று அகவி உயர்ந்த மயில்கள், அடுத்த கணம் பார்வை வட்டத்தை விட்டு நீங்கின.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன