கட்டுக்கழுத்தியாய் போனவளுக்கு கலர் புடவையென்று ஆடுக லாவணி

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காம் நாவல். அதிலிருந்து ஒரு சிறு பகுதி

===================================================================================

புதுப் புடவை வந்தாச்சா? மராத்தி புரோகிதன் விசாரித்தான்.

 

வாங்க ஆள் போயிருக்கு.  யாரோ சொன்னார்கள்.

 

என்ன நிறம்? சோனியாக நின்ற ஒரு பெண் கேட்டாள். அண்டை வீடு.

 

வெள்ளை.

 

எதுக்கு வெள்ளைப் புடவை?  சுமங்கலியாப் போயிருக்கா. சிவப்புப் புடவை தான் உகந்தது.

 

பக்கத்து, எதிர் குடித்தனப் பெண்கள் ஒரே குரலில் சொன்னார்கள்.

 

திலீப் அப்பாவை நினைத்துக் கொண்டான். அவர்கள் அவர் இன்னும் எங்கோ ஜீவித்திருப்பதாக திடமாக நம்புகிறார்கள்.  அகல்யா கூடத்தான். அதை மறுக்க எந்த ஆதாரமும் யாரிடமும் இல்லை. ஷாலினிதாய் மஞ்சளும் குங்குமமுமாகத் தான் சிதை ஏறுவாள்.

 

திலீப் மனசைத் திடப்படுத்திக்கோ. நாம கொடுத்து வச்சது அவ்வளவு தான்.

 

பெரியப்பா அவன் கையைப் பிடித்தபடி சொன்னார். என்னமோ தோன்ற அவர் தோளில் முகம் புதைத்துக்கொண்டான் திலீப். மெதுவாகத் தட்டியபடி, கம்போஸ் யுவர்செல்ப் என்று இரண்டு தடவை சொன்னார் பெரியப்பா.

 

உன் ஆத்துக்காரி எங்கே?

 

அகல்யா வந்து காலைத் தொட்டு வணங்க முற்பட, வேண்டாம் என்று விலக்கினார்.

 

அகல்யாவின் அப்பா எல்லோரையும் இடித்துக் கொண்டு முன்னால் வந்து பெரிதாக வணங்கி, கஷ்டப் படாம போனாளே அதுவே நிம்மதி என்று பெரியப்பாவிடம் சொல்ல அவர் யோசனையோடு பார்த்தார். எங்கப்பா என்றாள் அகல்யா.

 

குளிப்பாட்டிடலாமா?

 

யாரோ கேட்டார்கள்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன