வாழ்ந்து போதீரே – அரசூர் வம்சம் நான்கு நாவல் வரிசையில் நான்காவது- அதிலிருந்து ஒரு சிறு பகுதி
மூணு மாசமா ஆர்ட்டிஸ்ட் பென்ஷன் வரலே சாப்.
லாவணிக் கலைஞர்கள் பெரியப்பாவை சூழ்ந்து கொண்டு முறையிட்டார்கள். ஷாலினி தாயை விட முதியவளான ஒரு பழைய ஆட்டக்காரி தன் வயதையும் இருப்பையும் பொருட்படுத்தாது மினிஸ்டர் பெரியப்பா காலில் விழுந்து நமஸ்காரம் செய்தாள். அவர் அதிர்ச்சியோடு விலகி செக்யூரிட்டி ஆட்களைப் பார்த்த பார்வையில் என்ன புடுங்கிட்டு இருக்கீங்க என்ற கேள்வி தெரிந்தது.
சோபானத்துக்கு, அகல் விளக்கும் பூவுமாகப் புது மணப்பெண்ணைத் தோழிகள் அழைத்துப் போகும் தருணத்தில் பாடுகிற, மங்கலமானதும், குறும்பு நிறைந்ததுமான பாடலை அண்டை அயல் மூத்த பெண்கள் எல்லாக் குரலிலும் பாட, ஷாலினி தாயின் உடலை ஆண்கள் பார்க்காமல் குளிப்பித்தார்கள்.
திலீப் தயக்கத்தோடு பெரியப்பாவைப் பார்த்தான்.
என்னடா, வேலைக்குப் போறே தானே.
ஆமா பெரியப்பா. காலையிலே தான் இங்கே வந்தேன்.
பத்தாம் நாள் அங்கேயே செஞ்சுடலாமே. கோவிலும் குளமுமா இருக்கே.
செய்யலாம் அம்மா அங்கே வந்ததே இல்லையே.
அவன் சொல்லவில்லை. சே என்று போனது திலீப்புக்கு.
என்ன மனுஷர். அடுத்தவருடைய துக்கத்தில் கூட அதிகார முகத்தை நுழைக்கப் பார்க்கிறார்.
ஆலப்புழையோ கோலப்புழையோ உத்தியோகம் கிடைச்சிருக்கு. தக்க வச்சுக்கறது உன் சாமர்த்தியம்.
பெரியப்பா சத்தமின்றி, ஆனால் அழுத்தமாகச் சொன்னார்.
அரசு அதிகாரி ஒருத்தர் அவசரமாக ஃபைலோடு ஓடி வந்து மினிஸ்டர் காதில் கிசுகிசுத்தது திலீப்புக்கும் கேட்டது –
சார், மூத்திரம் ஒழிச்சு வர, கார் ரெடியா தெருக் கோடியிலே வச்சிருக்கு.
காருக்குள்ளேயா என்கிற மாதிரி சந்தேகத்தோடு அவன் பார்க்க, அடுத்த தெருவிலே கட்சி பிரமுகர் வீடு என்று விளக்கிச் சிரித்தார் பெரியப்பா. கூடவே, தன் அந்தஸ்துக்கு இவனோடு அபத்தமான நகைச்சுவைக்கெல்லாம் சிரிப்பது சரிப்படாது என்று தோன்றவோ என்னமோ, மூஞ்சியை உம்மென்று வைத்துக் கொண்டு எதிரே நூதன் சினிமாப்பட போஸ்டர் ஒட்டியிருந்த சுவரைக் கூர்ந்து பார்த்தார். கொங்கணி மாமியா முலையைக் காட்டி அங்கே நிற்கிறாள்?