நூதன் வந்து கொண்டிருக்கிறார் – ஆகாரச் செய்தியும் ஆதாரச் செய்தியும் முன்னால் வர

ஒரு பழைய மோட்டார் சைக்கிள் ஓரமாக நின்றது. மினிஸ்டர் பெரியப்பாவின் காவலர்கள் ஓட்டி வந்தவனை நரகத்துக்கு உடனடியாகப் போகச் சொல்லிக் கழுத்தில் கை வைக்க, அவன் சட்டைப் பையில் இருந்து எடுத்த அட்டையைக் காட்டினான். அட்டியின்றி வழி கிடைத்தது. பிரஸ், பிரஸ் என்று ஜபித்தபடி அந்த மனுஷன் முன்னேறி வந்து கொண்டிருந்தான்.

 

பெரியப்பா, தனக்கு மூத்திரம் போக அழைப்பு விடுத்த ஆபீசரைக் கூப்பிட்டார்.

 

இவங்க கிட்டே ஒரு மனு வாங்கி எனக்கு நோட் போட்டு வைக்கணும்.

 

சடசடவென்று கையில் பிடித்த ரெக்சின் பைகளில் இருந்து, ஒவ்வொரு லாவணிக் கலைஞரும் எழுதித் தயாராக வைத்திருக்கும் பெட்டிஷனை அந்த அதிகாரியிடம் கொடுக்க, வனஸ்பதிப் புகை கிளப்பிக் கொண்டு ஒரு தீப்பந்தம் எரிய ஆரம்பித்தது. ஷாலினி தாய்க்கு சொர்க்கத்துக்கு வழி காட்ட நெய்த் தீபச் சுடர் அது என்று மராத்தி புரோகிதன் திலீப்பிடம் விளக்கினான்.

 

அம்மாவுக்கு சகோதரன், அவங்க குடும்பம்?

 

மோட்டார் சைக்கிளில் வந்தவன் உத்தேசமாகக் கூட்டத்தில் பார்த்துக் கேள்வியை எறிந்தான்.

 

ஒருத்தரும் இல்லே. தனி மனுஷி தான் சாகற வரைக்கும்.

 

லாவணிக் கலைஞர்களில் ஒருவர் மனுவை நீட்டியபடி சொன்னார்.

 

சும்மா இருப்பா. ஷாலினிதாய்க்கு ஒரே மகன் இந்தப் பையன் திலீப்.

 

இருமலுக்கு நடுவே ஒரு முதிய பெண்மணி சொன்னார்.

 

கேட்ட உடனே எப்படி மனு கொடுக்கறீங்க எல்லோரும்?

 

ஆபீசர் சிறு சிரிப்போடு விசாரித்தார்.

 

எஜமான், நாளைக்கே நாங்களும் செத்து நரகம் போனாலும் மனுவோடு தான் போவோம்.  வராத பென்ஷன் பாக்கி குடும்பத்துக்காவது போக ஏற்பாடு செய்யச் சொல்லி மனு இதெல்லாம். என் பேரனுக்காவது கிடைக்கட்டும்.

 

மோட்டார் சைக்கிள்காரர் ஓரமாக நின்று திலீப்பை ஏகத்துக்குச் சைகை செய்து அழைத்தார். திலீப்பை மராட்டிய புரோகிதன் உடனே குளித்து வரச் சொன்னான். இந்தோ வரேன் என்று புரோகிதனுக்குக் கையைக் காட்டி மோட்டார் சைக்கிள் காரனிடம் போனான் திலீப்.

 

சொன்ன பேச்சு கேட்க மாட்டியா? நேரமாகுது. நான் அந்தரத்திலே விட்டு போனா அழுகிச் சாக வேண்டி வரும்.

 

புரோகிதன் தன் தலைமை ஸ்தானத்தை உறுதி செய்யும் குரலில் திலீப்பை மிரட்ட, திலீப் பெரியப்பாவை புகல் தேடி நோக்கினான். இந்த வெத்துவேட்டு புரோகிதனிடன் நம் செல்வாக்கு உப்புக்குக் கூட செல்லுபடியாகாது என்று கண்டு கொண்ட பெரியப்பா அவசரமாக வீட்டுக்குள் நுழைந்தார்.

 

பாட்டி மறுபடி ஜன்னலில் எட்டிப் பார்த்து விட்டு, மினிஸ்டர் மகன் உள்ளே வருவதைப் பார்த்தோ என்னவோ திரும்பப் போனாள்.

 

அவளுக்கு என்னத்துக்கு இந்தக் கஷ்டம் எல்லாம்.  எட்டு ஊருக்கு விட்டெறியும் அதிகாரத்தோடு இருக்கப்பட்ட மந்திரி மகன் வீட்டில் மிச்ச ஆயுசு முழுவதும் இளைப்பாறாலாமே.

 

திலீப் நினைத்தபடி குளிக்கக் கிளம்ப, மோட்டார் சைக்கிள் காரன் அவன் பாதையில் குறுக்கே விழுந்தான். பிரஸ், பிரஸ் என்று திரும்ப உச்சரித்த அவன் கண்கள் பாதி மூடி இருந்தன. அதிகாரம் மறைமுகமாவது அச்சு யந்திரத்தின் மூலம் இவனுக்கும் பாய்கிறதால் ஏற்பட்ட அந்தஸ்தோ என்னமோ. திலீப் இவனைப் பகைத்துக் கொள்ள மாட்டான்.

 

ஒரு மராத்திப் பத்திரிகைப் பெயரைச் சொல்லிக் கேட்டான் –

 

படிக்கிறீங்களா, ரொம்ப அபூர்வமான ஒண்ணு.

 

அவன் சொல்லும்போது திலீப்பின் சின்ன மாமனார் நினைவு வந்தார்.

 

பதிர்பேணியிலே ஒரு லோட்டா பால் விட்டுண்டு, உள்ளே ஒரு குஞ்சாலாடையும் உதிர்த்துப் போட்டுட்டு சாப்பிட்டா, அடடா, தேவாமிர்தம்.

 

அவர் பத்திரிகை நிருபர் போலத் தான் வாயைக் குவித்து ஆகாரச் செய்தி சொல்லி மகிழ்வார்.  அவர் காமத் ஓட்டலில் டிபன் சாப்பிட்டு வந்து இந்தக் கூட்டத்தில் ஒரு ஓரமாக இருப்பார் என்று திலீப்புக்குத் தெரியும்.

 

எனக்கு எல்லோரோட பெயர், வயசு, இறந்து போனவங்களுக்கு உறவு இதெல்லாம் வேணும். சரியான தகவல் தேவை. பத்திரிகையில் போடணுமே.

 

மராட்டியப் பத்திரிகைக்காரன் முறையிட்டான்.

 

பிழையான தகவல்களாலான சாவுச் செய்தி மராட்டிய மண்ணெங்கும் சொல்லொணா துன்பத்தை விதைக்க வல்லது என்று பொறுப்பு உணர்ந்த குரலில் திரும்பவும் அவன், எல்லோருடைய பெயர், வயது, உறவு என்று சொல்ல, மறுபடி மராட்டிய புரோகிதன் நரகம் பக்கத்தில் தான் என்று வார்த்தை அருளியது காதில் கேட்கவில்லை என்ற பாவத்தில் திலீப் குளிக்கப் போனான்.

 

நான் சொல்றேன் எழுதிக்குங்க.

 

, அகல்யா அசதி முகத்தில் தெரிய அவன் பக்கமாக வந்தாள். நேற்று ராத்திரி முழுக்க அவளுக்குத்தான் அலைச்சல்.

 

பாத்ரூம்லே வெதுவெதுன்னு வென்னீர் விளாவி வச்சிருக்கேன். அவ்வளவு தான் ரேகா வீட்டு அடுப்பிலே சூடு படுத்த முடிஞ்சுது. கெரசின் அங்கேயும் காலி. போய்க் குளிச்சிட்டு சடுதியிலே வாங்கோ.

 

அகல்யா டர்க்கி டவலையும் புது மைசூர் சாண்டல் சோப்பையும் கொடுத்தாள்.

 

ரொம்ப கமகமன்னு வர வேணாம். சூழ்நிலையை பார்த்து செய்யுங்கோ.

 

அவள் சொல்லும் போதே, கீழ் வீட்டுப் பெண், கத்தரி கலர் ஃப்ராக் போட்ட நாலு வயதுப் பெண் குழந்தையின் கையைப் பிடித்தபடி வந்தாள்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன