டால்டாவோ வனஸ்பதியோ நெய்ப்பந்தமாக எரிந்து வழிகாட்ட ஷாலினிதாய் சுவர்க்கத்துக்குப் புறப்பட்டாள்

நேத்து பார்த்தேனே. நானும் சாகரிகாவும் கை காட்டினோம். அம்மா சாகரிகா கையைப் பிடிச்சுக்கிட்டு நர்சரி ரைம் பாடினாளே.

 

குழந்தை ஹம்ப்டி டம்ப்டி ஸாட் ஆன் த வால் என்று பாட ஆரம்பித்தது.

 

வேண்டாம் என்று அடக்கினாள் அதன் அம்மா.

 

குழந்தையை எல்லாம் ஏன் கூட்டி வரணும்? உடம்பு கிடக்கிற இடமாச்சே. குழந்தைகளுக்கு சட்டுனு பிடிச்சுடுமே ஏதாவது சரியில்லேன்னா.

 

மனதில் நினைத்ததை அகல்யாவிடம் சொல்லத் திரும்ப, அவளை அங்கே காணோம்.

 

அம்மாவை இப்போதே நோய் அண்டிக் குவியும் வெற்று சடலமாக நினைக்க ஆரம்பித்தாகி விட்டது.  பிரியமும், பாசமும், அடிப்படைக் கனிவும் எல்லாம் போன இடம் எங்கே?

 

முகம் பார்க்கும் கண்ணாடி மாட்டிய சுவரில் தன் முகம் பார்க்கத் திரும்பினான் அவன்.  யாரோ சாவு வீட்டுக் கண்ணாடியைக் கழற்றி வைத்திருந்தார்கள்.

 

குளித்துக் கொண்டிருக்கும்போது நான்கைந்து பேர் கதவைத் தட்டி அவசரம் என்றார்கள். அகல்யா குரலும் கேட்க, அவன் ஒரு காகிதம் உள்ளே போகும் அளவு கதவைத் திறந்து என்ன என்று அகல்யாவைக் கண்ணில் சோப்பு நுரையோடு  உத்தேசமாகப் பார்த்துக் கேட்க, நூதன் வரா என்றாள்.

 

யாரு நடிகையா?

 

ஆமா.

 

இன்னும் ஒரு தடவை சோப்பைத் தீற்றி முகம் அலம்பினான்.

 

அம்மா, நீ ஏன் கஷ்டப்படணும். நாட்டுப் பொண்ணு தான் போயாச்சே. என்னோடு வந்துடு.

 

மினிஸ்டர் பெரியப்பா குரலை உயர்த்திச் சொல்லுவது கேட்டது திலீப் உடம்பு துவட்டிக் கொண்டிருந்தபோது. அவனுக்கும் கேட்க வேண்டும் என்று சொல்வதாக இருக்கலாம்.

 

போகட்டும், நூதன் வரப் போகிறாள்.

 

குளிச்சு வர இவ்வளவு நேரமா, பாத்ரூம்லே வேறே ஏதாவது செஞ்சிட்டிருந்தியா?

 

மராட்டி புரோகிதன் மணியடிக்கிறது போல் கையாட்டிச் சிரிக்க எடுபிடிகள் ஒரு வினாடி சிரித்து, இன்றைக்குப் படியளக்கப் போகிற மகாராஜன் இவனாச்சே என்று நினைவில் பட,  நிறுத்தி எல்லாத் திசையிலும் பார்த்தார்கள்.

 

புரோகிதன் தன் தலைமையை மீண்டும் நிலை நாட்டிய கர்வம் தெரிய,  ஓங்கி மந்திரம் சொன்னான்.

 

ஜீப் நிற்கும் சத்தம். குதித்து வெளியேறும் அதிகாரிகள். சைரன் பொருந்திய கார். அப்புறம் பெரிய கருப்பு அம்பாசடர். இன்னொரு மந்திரி.

 

இவர் மாநில அரசு அமைச்சர் என்று திலீப்புக்குத் தெரியும். பிராணி நலனோ,  மீன் வளத்துறையோ நிர்வகிக்கிறவர்.  கூடவே போட்டோ கிராபரும் உண்டு.

 

ரெண்டு கையையும் விரித்தபடி வந்த அந்த ஸ்தூல சரீர மனுஷர், செண்ட்ரல் மினிஸ்டர் பெரியப்பாவின் பாதம் தொட்டு வணங்கியபின் சிரமப்பட்டு நிமிர்ந்து நின்று, அவரை அணைத்துக் கொண்டார். ஃபோட்டோகிராபர் இல்லையென்று தலையாட்ட, திரும்பப் பெரியப்பாவை அணைக்க முற்பட பெரியப்பா, மழையில் நனைந்த வைக்கோல் பொம்மை போல நின்றார்.

 

ரொம்ப வருத்தப்படறேன். முதலமைச்சர் சோவியத் யூனியன் போயிருக்கறதாலே. காலையிலே எனக்கு ஓவர்சீஸ் கால் போட்டு.

 

 

அவர் கையைப் பற்றியபடி துக்கம் பரிமாறி விட்டு, கண்ணால் அவசரம் அவசரம் என்று ஜாடை காட்டிக் கொண்டிருந்த மராட்டிப் புரோகிதர் முன் உட்கார்ந்தான் திலீப்.

 

Oct 13 2024

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன