நூதன் நூதன் என ஸ்மரிக்கும் ஜனக் கடல் பிளந்து வழிவிட அன்னம் போல் நூதன் மிதந்து வந்தபோது

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவல். அதிலிருந்து அடுத்த சிற்றஞ்சிறு மொழிச் சிதறல் –


அவனைப் பாராட்டுகிற தொனியில், நல்லது நீ இப்போ தான் நல்ல பிள்ளை, காயத்ரி ஜபி என்றார் அவர்.

 

சார், எல்லா பெயரும் வாங்கிட்டேன். அகல்யா வயசு என்ன ?

 

பத்திரிகைக்காரன் குறுக்கே புகுந்து கேட்க, அப்புறம் என்று கை காட்டினார் புரோகிதர்.

 

இன்னும் அரை மணி நேரத்துலே எடுத்தாகணும்.  அவங்கவங்க குளிச்சுட்டு சாப்பிடணுமே, ஆபீஸ், ஸ்கூல்ன்னு போகணுமே.

 

அவர் தன் சமூக அக்கறையைப் பங்கு வைக்கத் தவறவில்லை என்பது திலீப்புக்கு பிடித்தது.

 

இந்த நெய்யை மாவிலையாலே எடுத்து விடுங்கோ.

 

புரோகிதர் ஒரு தகர டப்பாவில் டால்டாவை எடுத்துப்  போட்டு, நான்கு சுள்ளிகளைக் கொளுத்தி எரிய வைத்த சிறு அக்னியில் அழுக்குத் துணியால் பிடித்துக் காட்டி உருக்கிக் கொண்டிருந்ததைக் கீழே வைத்தார். அவர் மடித்துக் கொடுத்தது மாவிலை இல்லை என்று திலீபுக்குத் தெரியும்.

 

நூதன் நூதன் நூதன்

 

ஒன்றிரண்டாக எழுந்து நூறு குரல்கள் ஒன்று சேர, அந்தத் தெருவே வாசல்களுக்கு வந்து நூதன் என்று திரும்பத் திரும்ப ஒரு சேர முழங்கியது.

 

கடலில் மிதந்து வருகிற வலைத் தோணி போல கருப்புப் புடவையும் வெள்ளை ரவிக்கையும் உடுத்து நூதன் நடந்து வந்தார். திலீப் பார்த்துக் கொண்டிருக்க, மோசேக்கு வழி விட்ட கடல் போல திரண்டு நின்ற ஜனக்கூட்டம் ரெண்டாகப் பிரிந்து நூதன் போக வழி விட்டது. இலையும் தழையும் பூவுமாகப் பெரியதாகச் சுற்றிய ஒரு மலர் வளையத்தை இருகையாலும் பிடித்தபடி, நூதன் பின்னாள் ஒரு சோனியான பெண்ணும் வந்து கொண்டிருந்தாள்.   பணிப்பெண்ணாக இருக்கலாம்.

 

வரும்போது குறுக்கே நின்று புன்னகைத்த மினிஸ்டர் பெரியப்பாவின் காலைத் தொட்டுக் கும்பிட்டு நிமிர்ந்துரெண்டு வார்த்தை பேசி விட்டு முன்னால் நடந்தார் நூதன். பெரியப்பா முகத்தில் திருப்தி தெரிந்தது.

 

வீட்டு வாசலில் நூதன். அகல்யா ஓடோடியும் வந்து எதிர்கொண்டாள் நூதனை. அவள் முகத்தில் பெருமையும் கம்பீரமும் ஒரு நிமிடம் படந்து விலகியதாக திலீப் நினைத்தான்.

 

அகல்யா அவனைக் கண்ணால் தேடிப் பக்கத்தில் வரச் சொன்னாள். புரோகிதரிடம் சொல்லிக் கொண்டு ஓடலாம் என்று திலீப் பார்வையை உயர்த்த மராத்தியப் புரோகிதர் அங்கே இல்லை. அகல்யா பின்னால், நூதனுக்கு வெகு அருகே எல்லாப் பிரார்த்தனையும் பலித்த எக்களிப்பும் பரவசமுமாக அவர் நின்று கொண்டிருந்தார்.

 

ஷாலினிதாய் அவங்களோட ஒரே மகன். நான் மருமகள்.

 

சுருக்கமாக அறிமுகம் செய்தாள் அகல்யா.

 

நூதன் வினாடிப் பார்வையில் முழுமையான சோகத்தைக் கச்சிதமாக வெளிப்படுத்தி திலீப்பிடம் வலது கையை நீட்டினாள். நெஞ்சு படபடக்க, அகல்யாவைப் பார்த்து விட்டு, அந்த நீண்ட விரல்களைத் தொட்டான் அவன்.

 

அங்கீகரித்துச் சோகமாகப் புன்னகைத்து, அடுத்த வினாடி புடவைத் தலைப்பில் கையை மறைத்துக் கொண்டு, மெதுவான குரலில் கூறினார் நூதன் –

 

எவ்வளவு உன்னதமான கலைஞர் அவங்க, ஏக்தம் நல்ல கதிக்குத் தான் போயிருப்பாங்க.

 

நூதன் சொல்லிக் கொள்ளாமல் காருக்கு நடக்க ஆரம்பிக்க, மக்கள் வெள்ளம் திலீப்பை உந்தித் தள்ளியது. ஒரு சுழலில் அகப்பட்ட அவனை ஒரு வினாடி நிறுத்தியவன், அகல்யா வயசு ப்ளீஸ், ரிப்போர்ட்டுக்கு வேணும் என்றான். பதில் சொல்லும் முன் வாசலுக்கு வெகு தூரத்தில் தெருவில் நின்றான் திலீப்.

 

பக்கத்தில் அவன் கட்சியின் பேட்டை பிரமுகர் ஸ்வீட் ஸ்டால்கார பாலகிருஷ்ண கதம் ஜவந்தி மாலையோடு நின்றார்.

 

தலைவர் புணேயிலே ஒரு கல்யாணத்துக்கு .

 

கதம் ஆரம்பிக்க, புரோகிதர் திலீப்பை உரக்க அழைத்தார். அவர் வா என்றால் வரணும். திலீப் ஓடினான்.

 

நேரமாச்சுன்னு சொன்னேனே. நீங்க வரல்லேன்னா நான் போய்ட்டே இருப்பேன்.

 

எங்கே, நூதன் பின்னாடியா?

 

நினைத்தபடி அவரோடு சவ வண்டிப் பக்கம் போய் நின்றான் திலீப். உள்ளே இருந்து ஷாலினிதாய் உடலைச் சுமந்து வந்தவர்கள் வண்டியின் பின் கதவு திறந்து உள்ளே தரையில் இட, எல்லோருடைய அசைவுக்கும் கீழ்ப் பணிந்து ஷாலினிதாயின் தளர்ந்த சரீரம் சமாதானம் சொல்லி ஆடிக் கொண்டிருந்தது.

 

அழு. அழுடா. அழு. அழு. அழு. அழு. அழு. அழு. அழு. அழு. அழு. கிராதகா, அழுடா.

 

திலீப் தலையை ஆட்டிக்  கொண்டான். இல்லை, அழுகை வரவே இல்லை.

 

திலீப் தீயை உரியில் வைத்துத் தூக்கியபடி முன் இருக்கையில் அமர, ஸ்டீரிங்கில் இருந்த மராட்டிப் புரோகிதன் சொன்னான் –

 

என் பிருஷ்டத்துலே தீ வச்சு ராக்கெட் மாதிரி கிளப்பற ஐடியாவா.  சரிப்படாது. பின்னாலே வச்சுட்டு நீ மட்டும் ஏறு.

 

திலீப் மறுபடி சவ ஊர்தியின் முகப்பில் ஏறினான். வண்டி கிளம்பியது.

 

சார், அகல்யா, வயசு?

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன