பஞ்சாபி, இந்தி, காஷ்மீரி என்று எல்லா மொழியிலும் ப்ரியம் வைக்க ஜோடா-கலர்

வாழ்ந்து போதீரே   அத்தியாயம்   முப்பத்தெட்டு         

          

(பகவதியின் நாட்குறிப்பில் இருந்து)

2 ஏப்ரல்  1901 –   பங்குனி 20 செவ்வாய்க்கிழமை

 

யாரோடயும் விரோதம் பாராட்டாமல்,  பிரியத்தோடு எல்லாரையும் அரவணைச்சு இனி இருக்கப் போகிற காலம் எல்லாம் கழியட்டும். பத்து நாளாக நான் டயரி எழுதலே. பேனாவைப் பிடிக்க கை நடுங்கறது. பத்து நாள் கழிச்சு இன்னிக்குத்தான் சாதாரணமா சாப்பிட்டேன். கொஞ்சமா பேசினேன். எழுதறேன்.

 

தேர்த் திருவிழா நடக்கப் போகிற நேரம் இது. பேசாம, யாருக்கோ எங்கேயோ ஏதோ நடக்கறதுன்னு நான் ஓரமாப் போய் பதினஞ்சாவது உட்காரலாமா? நான் இங்கே வந்து பார்த்தாகிற தேராக்கும் இது.  காலம் தான் எப்படி இந்த மேனிக்கு விரசா ஓடறது. புடவை கூட சரியாகக் கட்டத் தெரியாம மரப்பாச்சிக்குத் துணி சுத்தின மாதிரி தத்துப்பித்துன்னு சுத்திண்டு இவர் கையைப் பிடிச்சுண்டு இங்கே வந்து இத்தனை வருஷம் ஓடியே போனது.

 

லண்டன்லே சக்ரவர்த்தினி விக்தோரியாம்மை இந்த வருஷம் பிறந்ததுமே ஸ்வர்க்கத்துக்குப் புறப்பட்டுப் போயாச்சு. அது ஒரு பெரிய விசனம் என்கிறதாலே இந்த வருஷம் சகல உல்சவமும், பண்டிகையும் அளவோட குதிச்சுக் கூத்தாடிக் கொண்டாடணும்னு எல்லாரும் சொன்னாலும், மகராணி போனது கல்யாணச் சாவு ஆச்சே,  அம்பதா அறுபதா,  சொளையா தொண்ணூறு வயசு இல்லையோ அவளுக்கு.

 

என்னிட்டு, எந்தக் கொண்டாட்டத்திலே பாக்கி வச்சாலும் அவளுக்கு அவமரியாதை செய்யறது ஆகும்னு ஒரு கட்சி. இவர் எல்லாம் அந்தப் படியானவர் தான். நானும் தான். சோபானம் சோபானம்னு பாடி பரவசமாகணும். அப்படியான மனுஷி. என்னமா வச்சிண்டிருந்தா ஜனங்களை. இன்னும் கொஞ்சம் நாள் இருந்தா நம்மோட இந்த பாரத தேசத்துக்கும் நல்லது பண்ணியிருப்பாளா இருக்கும்.

 

ஆக, புறப்பட்டுப் போன விக்டோரியாம்மைக்கு ஸ்வர்க்கம் என்னென்னிக்கும் சித்தியாக மனசோட தொழுது, உல்சவக் கொடி ஏத்தியாச்சு. இங்கேயானா, அதை துவஜஸ்தம்பத்திலே சாமி கொடி பறக்க விடறதுங்கறா. ஒவ்வொரு பிரதேசத்திலேயும் ஒரு பேர்.

 

எல்லாப் பண்டிகை நேரத்திலேயும், எட்வர்ட் துரை அடுத்த சக்ரவர்த்தியானதையும் சேர்த்துக் கொண்டாடணும்னு சிலபேர் சொன்னாலும், ராணியம்மா பேரும் புகழும் இவருக்கு வர, இன்னும் நாற்பது வருஷமாகலாம்.  அதுவரை நான் இருப்பேனோ என்னமோ.  அப்புறம், தேர் சுப்பிரமணிய சுவாமிக்கா? ஏழாமன் எட்வர்ட் துரைக்கா?

 

ஏழாமன்னு சொன்னா, ஏழாவது. எட்வர்ட் தானே அவர்? துரை பெயர் தப்பா எழுதிட்டேனோ. போகட்டும், ஒரு வெள்ளைக்காரர். விக்டோரியா அம்மைக்கு புத்ரன். அது போதும். மத்த ஓர்மைப் பிசகெல்லாம் மறந்து போயிடட்டும்.

 

எழுதணும்னு உக்காந்ததும்  கருத்த சாயபுவோட கூத்து தான் அதி முக்கியமா ஓடோடி நினைவிலே வருது.  கருத்த சாயபுன்னு கடையிலே  ஊழியம் பண்றவா சொல்லிக் கேட்டுக் கேட்டு பெயர் அப்படித்தான் படிஞ்சிருக்கு மனசுலே.

 

பெயர் எல்லாம் சரியாச் சொல்லணும்னு இவர் சொல்வார். புகையிலைக் கடை பாகஸ்தர் சுலைமான் ராவுத்தர், கருத்தான் ராவுத்தர்னு ரெண்டு பேர், அதிலே கருத்தான் எனப்பட்டவருக்கு அவர் பெயரே சமயத்துலே மனசிலே நிக்காதாம்.  பெயரை மாற்றி வேறே சொல்லிடுவாராம் சமயத்துலே. அவர் போன வாரம் பெண்டாட்டி நூருஜகன் பீவியைப் பட்டணம் பார்க்க ரயில்லே கூட்டி வந்துட்டு சமுத்திரக் கரையிலே உட்கார வச்சுட்டு கடைக்குப் புறப்பட்டு வந்துட்டாராம். மிட்டாய் வாங்கிண்டு வரேன்னு சொல்லிட்டு கிளம்பியவர். மிட்டாய்க்கடை வாசல்லே யாரோ சிநேகிதனைப் பார்த்து வந்த காரியம் மறந்து பேசிட்டே இருந்துட்டாராம். அவர் கூட அவரோட சாரட்லேயே கடைக்கும் போயாச்சாம் மனுஷர். பாவம் அந்தப் பொம்மனாட்டி இனியும் புருஷனோட கோவிலைக் காணணும் குளத்தைக் காணணும்னு இறங்குவான்னு தோணலை.

 

கருத்த ராவுத்தர் இதை எல்லாம் ஒண்ணு விடாமல் எழுதி இவருக்குக் கடிதாசு போட்டிருந்தார்.  இவர் படிச்சுட்டு ஓன்னு சோடா பாட்டில் உடைச்ச மாதிரி சிரிச்சார். ஆமா, அதை ஏன் கேக்கணும், இங்கே போன மாசம் சோடான்னு ஒரு திரவத்தை கண்ணாடி குப்பியிலே அடைச்சு, தக்கை வச்சு மூடி, அதை கடையிலே எல்லாம் விக்க ஆரம்பிச்சு ஏக பிரபலம். புகையிலைக் கடையிலே கூட அந்த பாட்டிலை எல்லாம் நெட்டக்குத்தலா நிறுத்தி வச்சு, ரெண்டு சல்லிக்கு விற்க ஆரம்பிச்சிருக்கு. குடிச்சு முடிச்சு பொறையேறிண்டே குப்பியைத் திருப்பிக் கொடுத்துடணும்.

 

குண்டு குண்டா ரெண்டு ராயர்கள் வேலாயுதஸ்வாமி கோவில் தெருவிலே ஒரு வீடு பிடிச்சு இதுக்குன்னு யந்திரத்தை பிரதிஷ்டை பண்ணி ராப்பகலா கிணத்துத் தண்ணியை எறச்சு, அதிலே உப்பு, சக்கரை, சாயம்னு ஏதெல்லாமோ போட்டு வாயுவை நிரப்பி ஓஹோன்னு விக்கறா. எனக்கு ஒண்ணு கடை எடுத்து வச்சுட்டு வரும்போது கொண்டு வந்து கொடுத்தார்.   என்னமோ நறுவுசு வேலை பண்ணி திறந்தும் கொடுத்தார். புறங்கையிலே சாயமும் சக்கரையும் ஒட்ட நானும் கொஞ்சம் பானம் பண்ணினேன். சத்தம் இருக்கற அளவுக்கு சரக்கு நயம் இல்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன