அரசூரை அசையாமல் நிறுத்திய கொழும்பு வல்லிகள் மூணுபேர்

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி


கிட்டாண்ணா குரல்லே இந்த காளையார்கோவில் ஓதுவார் தேவாரம் பாடினது மனசுக்கு இதமா இருந்தது. இது சாமி சந்நிதியில் சாயரட்சை தீபாராதனை நேரத்துலே ஒரு அஞ்சு நிமிஷம் பாடறது இல்லே. பிரகாரத்திலே ஓரமா, நந்திக்குப் பக்கம் உட்கார்ந்து கையிலே சின்னதா தாளம் வச்சுத் தட்டியபடிக்கு மனசு விட்டுப் பாடறது.

 

நேத்து சாயரட்சை தீபாராதனை முடிஞ்சு, துணி விரிச்சு உட்கார்ந்து, கையிலே தாளம் தட்டிண்டு அவர் பாடினார் –

 

எல்லா பிறப்பும் பிறந்து இளைச்சுப் போனேன் எம்பெருமானே

 

கேட்டு கண்ணுலே ஜலம் வராம யாராவது இருந்தா அவாவா காது கேட்காமப் போனவான்னு தீர்மானம்.

 

அடுத்தாப்பலே, அவர் பித்தா, பெருமானே, அத்தான்னு பாடிண்டிருந்த நேரத்திலே சுகுணவல்லி கெக்கென்னு சிரிச்சுட்டா.  அதான் அந்தக் கொழும்புக்காரிப் பெண்குட்டி. கறுப்பா, தலை நிறைய தலைமயிரோட என்ன அழகா இருக்கா. இன்னிக்கு இருந்தா பதினைஞ்சு வயசு இருக்குமா?

 

ஆறு மாசம் முந்தி அவளும் அவ அம்மா அமிர்தவல்லியும் இங்கே வந்து சேர்ந்த கோலாகலத்தை தீபாவளி நேரத்திலே ஒரு நாள் எழுதியாச்சு. அமிர்தவல்லி இங்கே நம்ம மோகனவல்லிக்கு ஒண்ணு விட்ட அக்கா உறவாம். சொந்த அக்கான்னு முந்தி எழுதினது பிசகு. மோகனவல்லி, அதான் ஊரோடு வாஞ்சையா சொல்றாளே, கொட்டகுடித் தாசி. அவளுக்கு மூத்த அக்கா உறவு கொழும்பி. அவளோட அகத்துக்காரர் யார்னு யாரும் கேட்கலே. நானும் தான்.

 

பகவான் இந்த வல்லிகளுக்கு வஞ்சனை இல்லாம வனப்பைக் குழைச்சு உடம்பிலே பூசி அனுப்பியிருக்கான். ஊர் ஆம்பளைகள் எல்லோரும் கள்ளுக் குடிச்ச குரங்கு மாதிரி ராப்பகலா இதே மோகத்தோட சுத்தியாறது. யார் பேரழகின்னு சர்ச்சை எங்கே பார்த்தாலும் நடக்கறதாம். ஜோஸ்யர் மாமி தான் இப்படியான உருப்படி இல்லாத வம்பெல்லாம் கொண்டு வந்து கொட்டிட்டுப் போவா.

 

ஆமா, யார் அழகு? உள்ளூர் மோகினி மோகனவல்லி அழகுக்கு என்ன குறைச்சல்? வந்து சேர்ந்த அந்த அமிர்தவல்லி தான் பங்கரையா என்ன? அவ பொண்ணு? கண்ணும் மூக்கும் உதடும் என்ன அழகா அந்த சுகுணவல்லி.

 

இவா மூணு பேரையும் சேர்த்துப் பார்க்கற போது சரஸ்வதி, லட்சுமி, பார்வதி மாதிரி இருக்கேன்னு நான் சொன்னதுக்கு, ஜோசியர் மாமி கோவிச்சுண்டு போய்ட்டா. எதை எதுக்கு நேர்னு சொல்றதுன்னு விவஸ்தை இல்லையான்னா என் கிட்டே அடுத்த நாள் வாசல்லே கோலம் போடறச்சே சண்டை.

 

அதை இவர் கிட்டே சொன்னா, நீ சொன்னது ரொம்பவும் பிழையாச்சேன்னு கோவிச்சுண்டார் இவரும். மன்னிச்சுக்கச் சொன்னேன் உடனே. நமக்குத் தெரிஞ்சது அதானே. அவரானா கண்ணையும் சிமிட்டிண்டு காதைப் பிடிச்சுத் திருகிச் சொன்னார் –

 

அவா மூணு பேரும் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி இல்லை. ரம்பா, ஊர்வசி, திலோத்தமையாக்கும்.

 

புகையிலைக் கடைக்காரரே,  வண்டி வண்டியா, தேகம் முழுக்க, கொழுப்பு  உமக்குன்னேன்.

 

கொழும்புக்காரி அழகா இருக்கறதுலே என்ன ஆச்சரியம். கொழும்புத் தேங்காயெண்ணெய் தான் தினம் உடம்பிலே பூசிண்டு குளிக்க.  தாளிச்சுக் கொட்ட. கறி பண்ண. அத்தனை தேங்காயெண்ணெயும் என்ன ஆகும்? உடம்புலே தான் கசியும் பாத்துக்கோ. அதுவும் அந்த அம்மாக்காரி அமிர்தவல்லி நிகுநிகுன்னு என்னமா இடுப்பு அவளுக்கு.

 

அவர் ஆரம்பிச்சார். நான் கோபத்தோட முதுகிலே அடிச்சு குளிக்கப் போகச் சொன்னேன். அது பொய்க் கோபம். அப்புறம் இப்போ வந்தது தான் ரௌத்ரம். வந்து என்னையே முடக்கிப் போட்டுடுத்து அந்தப் பிசாசு. இதுக்கும்  வல்லிக் குடும்பம் தான் காரணம்.

 

Oct 19 2024

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன