வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் நான்கில் இருந்து ஒரு சிறு பகுதி
அதை விட இந்த கொழும்புக்காரி அமிர்தவல்லியோட பெரும்பாடு ரோகம் இன்னும் சிரமம். இனியும் கஷ்டம்.
இங்கே நம்மூர் நம்ம தெருக்கோடி பரமக்குடி வைத்தியர் பிரக்யாதி கொழும்பு வரைக்கும் பரவியிருக்காமே. எப்போவாவது ஆத்துலே யாருக்காவது ஜுரம் வந்தா, இருமல் ஜலதோஷம் போதும்டா பகவானேன்னு அலுத்து வந்தா, அவருக்கு ரெண்டு நாளா கொல்லைக்குப் போகலேன்னா பரமக்குடி வைத்தியரை வரவழைச்சுடுவார். எங்க அம்பலப்புழையிலே பிஷாரடி வைத்தியர் மாதிரி தங்கமான மனுஷன். ஆனா, பிஷாரடி வைத்தியர் விக்ஞானம், ரசாயனம்னு கோணக் கட்சி பேசிண்டு கிடக்கற மாதிரி இல்லையாக்கும் இவர். பெரிய குடுமியும், பவ்யமும், சதா ஏதோ நாம ஜபமுமா அலைஞ்சுண்டிருப்பார். சுத்துலே ஏழெட்டு பட்டி தொட்டி கிராமத்திலேயும் யாருக்காவது ஏதாவதுன்னா, சர்க்கார் ஆஸ்பத்திரியிலே டிரஸ்ஸரைப் பாக்கப் போறது இந்தப் பக்கம் ரொம்பக் கம்மி. புதன்கிழமை சந்தை கூடுமே, அன்னிக்கு பரமக்குடி வைத்தியர் வீட்டு வாசல்லேயும் ஏகத்துக்கு காத்துண்டிருப்பா கையிலே சீசா வைச்சுண்டு.
அமிர்தவல்லியம்மாளுக்கு அவர் தான் சிஷ்ருஷை பண்ணறார். சொஸ்தமாயிண்டிருக்கோன்னு தெரியலேன்னேன் இவர் கிட்டே ஒரு விசை. இவரோட பாணியிலே சோடா உடைச்ச மாதிரி சிரிக்கறார். இதுலே சிரிக்கறதுக்கு என்ன இருக்கு.
நேத்திக்கு திங்கள் தானே, இல்லே செவ்வாயா, ஞாபகம் இல்லியே. நேத்திக்கு கோவில்லே ஓதுவார் பித்தா பிராந்தான்னு ஏதோ பாடினதுலே ஆரம்பிச்சு அமிர்தவல்லி ரோக விஷயத்துக்கு வந்தாச்சு. இல்லாட்டாலும் அம்மாவும் பொண்ணுமா அவா வந்தப்புறம் எல்லாப் பேச்சும், ஆண் பொண் அடங்கலா இவா பத்தித்தான் போய்ண்டிருக்கு. சொல்லிட்டேன் இல்லே இதை?
சுகுணவல்லி கிட்டே சொன்னேன் – போதும்டீ சிரிப்பு. கல்யாணத்துக்கு அப்புறம் சிரிக்க மிச்சம் வச்சுக்கோடீயம்மா. ஓதுவார் வயசான மனுஷர். களியாக்காதேடீ
நந்தவனத்திலே சுத்தறபோது இதைச் சொன்னேன். கேட்டதும் கன்னம் குழி விழ திரும்பவும் ஒரு புஞ்சிரி. அவள் என் கையை இறுகப் பிடிச்சுண்டு சொல்றா –
ஐயர் வீட்டம்மா, கல்யாணம் எல்லாம் எனக்கு வரப் போறதா என்ன, அதான் இப்பவே எல்லாச் சிரிப்பையும் சிரிச்சு முடிச்சுடறேனே.
அம்மா எப்படியோ, இந்தக் குட்டி மனசிலேயும் நடப்பிலேயும் அவளோட சித்தி, ஒண்ணு விட்ட சித்திதான், அந்த கொட்டகுடித் தாசியைக் கொண்டிருக்கா. மோகனவல்லி சிரிப்பும் இப்படி கல்மிஷம் இல்லாமத் தான் இருக்கும்.
ஏண்டி பொண்ணே, எதுக்கு அவளோட ஈஷிக்கறே. கோவிலுக்குப் போயிட்டு சமையல்கட்டுலே எல்லாம் போகணும் அவளானா. நீ மேலே பட்டா தீட்டாகி, அவ ராத்திரியிலே கிணத்துலே எறைச்சு விட்டுண்டு குளிக்கணுமாக்கும், பாவம்.
இப்படி ஜோசியர் மாமி அந்தச் சின்னப் பொண்ணு கிட்டே சொல்றா. நான் என்ன தெரியுமோ பண்ணினேன். அந்தச் செறிய குட்டியை சேர்த்துக் கட்டிண்டேன். கோவில் நந்தவனம்னா என்ன. பிரியத்தைக் காட்டக் கூடாதா. அவ தலையிலே இதமா வருடி, வாடீன்னு கையைப் பிடிச்சு அழைச்சுண்டு போனேன். எங்கேயா? அதான் ஓதுவார் கதா பிரசங்கம் பண்றாரே, சப்பரம் வச்ச கொட்டகைக்கு வெளியே காத்தோட்டமான இடத்துலே, அங்கே தான்.
யாரோ சுந்தரமூர்த்தி நாயனாராம். அவர் தான் பித்தா, வயசா, பிராந்தான்னு வாயிலே வந்த படிக்கு தேவாரம் எழுதினாராம். அவ்வளவு பிரேமமாம் ஈஸ்வரன் மேலே. சக மனுஷாளை விட பரமசிவனே எல்லாம்னு ஆனவராம். ரெண்டு பொண்டாட்டி வேறே. ரெண்டாவது வேளி கழிக்க ஈஸ்வரனே தரகர் உத்தியோகம் பார்த்தாராம். இதெல்லாம் கேட்க ரசமாத் தான் இருக்கு. அந்த மனுஷர் ரெண்டாம் தாரத்தோட வீட்டிலேயே தங்கிட்டாராம். அந்தப் பொண்ணு இவரை அரைக்கட்டுலே சேர்த்துப் பிடிச்சுண்டவ போல இருக்கு. நீர் இந்த ஊர் எல்லையை விட்டுப் போனீர் பாத்துக்கும்னு மிரட்டி வச்சிருந்தா. என்ன திமிர். இந்த மனுஷன் சொந்த ஊர்லே தேர் திருவிழான்னு கிளம்பிட்டாராம். அவரோட கண்ணு ரெண்டும் தெரியாமப் போனது அந்தப் பொம்மனாட்டி கைவேலயாக்கம். மனுஷன் திருவாரூர்லே போய் ஓய் கண்ணு குடுமய்யான்னு தேவாரம் பாடினாராம். ஈஸ்வரன் ஒத்தைக் கண்ணைக் கொடுத்திட்டு, இன்னொரு கண்ணுக்கு நீ இன்னொரு ஸ்தலத்துலே போய் இன்னொரு தேவாரம் பாடணும்னாராம். இவருக்குக் கோவம் வந்ததே பார்க்கணும். ஓய் ஈஸ்வரன், நீர் மூணு கண்ணோட, உம் பிள்ளை சுப்பிரமணி ஆறு ரெண்டு பனிரெண்டு கண்ணோட, உம்ம ரிஷபம் அதுக்கு ரெண்டு கண், ரெண்டு வீட்டுக்காரிக்கு மொத்தமா நாலு கண் இப்படி எல்லாம் சவுக்கியமா ஜீவியுங்கோ, நான் குன்றத்துலே ஏறி, குழியிலே விழுந்து கண்ணு தெரியாம அவதிப்பட்டுட்டுப் போறேன். நன்னா இருங்கோ. நீங்க நன்னா இருங்கோ. நீங்க எல்லோரும் ரொம்பவே நன்னா இருங்கோன்னாராம் பார்க்கலாம். என்ன தைரியம். இவர் ரெண்டு பொண்டாட்டி வச்சுண்டு கூத்தடிப்பாராம். கண்ணு போனா, மாற்றுக் கண்ணை ஈஸ்வரன் உடனடியா கொண்டு வந்து ஒப்படைச்சுடணுமாம். போக்கடாத்தனம். அவர் ஏழெட்டு பாட்டு வாழ்ந்து போ வாழ்ந்து போன்னு பாடினாராம். இல்லே அந்த தேவாரம் எல்லாம் வாழ்ந்து போவீர்ன்னோ என்னமோ முடியுமாம்.