இந்தச் சிறு பகுதி ‘வாழ்ந்து போதீரே’ என்னும் நான்காவது அரசூர் நாவலில் வருவது –
சங்கரன் விழித்துக் கொண்டபோது குழந்தை வீரிட்டுக் கொண்டிருந்தது. இன்னொரு குளிர்கால தினம் தில்லியில் விடிகிறது. ஞாயிற்றுக்கிழமைக்கே ஏற்பட்ட சோம்பலும் குளிரோடு இறுகக் கட்டியணைத்துக் கவிந்திருக்க, ஊரே சூரியனை அலட்சியப்படுத்திக் கவிழ்ந்து படுத்து உறங்கும் பொழுது அது.
குழந்தை மூத்திரம் போய் உடம்பெல்லாம், மெத்தையெல்லாம் நனைந்து இருந்தது. அது அனுபவிக்கும் மூன்றாவது குளிர்காலம். மாறி வரும் பருவங்கள் பழக இன்னும் நாலைந்து வருடமாவது பிடிக்கலாம். சின்னஞ்சிறு சிசு. உடுப்பு நனைந்து விழித்துக் கொண்டு அழுதால், பெற்றோர் தவிர வேறே யார் ரட்சிக்க?
பகிக்கு பால் கரைச்சுண்டு வா.
முதலில் விழித்துக் கொண்டு கட்டிலில் உட்கார்ந்தபடி பக்கத்தில் தொட்டிலை சற்றே எம்பிப் பிடித்து சங்கரன் தூக்கக் கலக்கத்துடன் ஆட்டியபடி சொன்னான்.
வசந்தி அவனை உலுக்கி நிறுத்தினாள்.
பால் இல்லே. இது சூசு. பால் கொடுத்த போதே பகவதிக்கு இடுப்புத் துணி மாத்தியிருக்கணும். விடிகாலை தூக்கத்திலே கண் அசந்துட்டேன்.
அவன் மடியில் குழந்தையைப் விட்டு விட்டு வசந்தி ஈரமான விரிப்பையும் குட்டிக் கம்பளியையும் வெளியே எடுத்துப் போகும்போது சங்கரன் சொன்னான் –
கிறிஸ்துமஸ் தாத்தாவோட பொண்ணு வயத்துப் பேத்தி மாதிரி இருக்கேடீ.
இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே. அப்படியே பக்கத்துலே இருக்கற கூடையிலே இருந்து துணி எடுத்து குழந்தைக்கு போடலாமில்லையா?
வசந்தி வெளியே இருந்து மாற்று கம்பளியும், விரிப்புமாக உள்ளே வந்தாள். அவள் கையில் கிரைப் வாட்டரும், இங்க் பில்லரில் ஊட்ட வேண்டிய ஏதோ டானிக்கும் கூட இருந்தன.
அவன் பக்கத்தில் உட்கார்ந்து குழந்தையைத் தன் மடிக்கு மாற்றிக் கொண்டாள். குழந்தையைப் போட்ட மடி அசைந்து தாழ்ந்தபடி இருக்க, அது தன் மழலையில் என்னமோ சொல்லிக் கொண்டிருந்தது. வசந்தி குனிந்து, காது ரெண்டையும் தலைமுடி கவிந்து மறைத்திருக்க அதன் பேச்சில் ஆமாடி செல்லம், தங்கக் குடமே, சமத்து ராஜாத்திடீ நீ என்றெல்லாம் ஆமோதித்து ஆழ்ந்திருந்தாள்.