சீதைக்கு ஜனகன் வளர்த்த தந்தை.
ஊர்மிளாவுக்கு ஜனகன் பெற்ற தந்தை.
சீதைக்கு ராமன் கணவன்.
ஊர்மிளாவுக்கு இலக்குவன் கணவன்.
ஜனகனுக்கு ராமனும் இலக்குவனும் மாப்பிள்ளைகள்.
ஆழி சூழ் உலகெலாம் பரதனே ஆள, தசரதன் கட்டளைப்படி ராமனும், கூடவே இலக்குவனும் ஏழிரண்டாண்டு கானகம் போக விதித்தபோது ஜனகன் என்ன செய்து கொண்டிருந்தான்?
தசரதன் அயோத்திப் பேரரசன் என்றால் ஜனகன் மிதிலையரசன்.
சம்பந்தி, நீங்க செய்யறது கொஞ்சம் கூட சரியில்லே.. என் ரெண்டு மாப்பிள்ளைகளுக்கும் நீங்க செஞ்சது பச்சைத் துரோகம்னு இடித்துரைத்திருக்க மாட்டானா?
ராமாயணத்தில் அரைகுறையாக நிற்கிற கேரக்டர் ஜனகன்.
———————————————————————————————
’முன்னாலே இருந்த மாவட்ட மேஜிஸ்ட்ரேட்டும் அழகான பொண்ணுதான் . இப்ப இருக்கற இந்தப் பொண்ணு தனலட்சுமி அவரை(ளை) விட அழகு.நல்ல குரல். செம கட்டை’ என்று அரசு விழா மேடையில் ஒரு பெண் அதிகாரியைப் பற்றி தரக்குறைவாகப் பேசிய உத்தர பிரதேச கதர் காதித்துறை அமைச்சன் ராஜாராம் பாண்டேயை தனலட்சுமி மேடையிலேயே செருப்பால் அடித்திருக்க வேணாமோ?
இந்த ஸ்கவுண்ட்ரல் கதர்த்துறை அமைச்சனாம். ஏகப்பட்ட கிரிமினல் கேஸ் தொட்ர்ந்து இன்னும் அவன் மேல் நடக்கிறதாம். மந்திரியாக்க வேறே எடுபிடி ஒருத்தனும் கிடைக்கலியா உ.பி.முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு? வெட்கம்.
——————————————————————————————-
வன்புணர்ச்சிக் குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை – அவசரச் சட்டத்தில் ராணுவத்தினர் உட்படுத்தப்படாததற்கு, ஆர்மி ஸ்பெஷல் பவர் ஆக்ட் (ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம்) திருத்தப்படாததே காரணம். அந்தச் சட்டத்தை மனிதாபிமானப்படியாக மாற்றியமைக்க (to make it a more humanitarian law) முன்னாள் ராணுவத் தலவரும் இன்றுள்ளவரும் குறுக்கே நின்றார், நிற்கிறார் – உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்
முன்னாள் ராணுவத் தலைவர் வி.கே அண்ணா ஹசாரே பக்கம் ஒண்டி உட்கார்ந்து கொண்டு அரசாங்கத்துக்கு எதிராகக் கொடி பிடிக்கிறாரே, இதைக் குறித்து என்ன சொல்கிறார்?
—————————————————————————————–
பதினைந்தாம் நூற்றாண்டில் ரெண்டே வருஷம் ஆட்சி புரிந்து, படுகொலைக்கு உள்ளான மூணாம் ரிச்சர்ட் சக்கரவர்த்தியின் எலும்புக்கூடை இங்கிலாந்தில் லீஸ்டர் நகரில் ஒரு கார் நிறுத்தும் மைதானத்தில் தோண்டி எடுத்திருக்கிறார்கள். டி என் ஏ சோதனை மூலம் (நல்ல வேளையாக அந்தப் பரம்பரையில் ஆளைத் தேடிப் பிடிச்சிருக்காங்க) ராஜாவேதான் என்று நிரூபிச்சாச்சாம்.
தமிழ்நாட்டில் சென்னைப் பக்கம் தோண்டினால் ஏதாவது பல்லவன் பல்லும் எல்லும் (எலும்பு) தட்டுப்பட வாய்ப்பு உண்டா? சோழர்கால கல்வெட்டெல்லாம் சென்னை நகர் எல்லைக்குள்ளேயே கிடைக்குது.. பேரரசர், சிற்றரசர் கிடைக்க மாட்டாங்களா?
——————————————————————————————
திருவிளையாடலில் தருமி (நாகேஷ்) செண்பகப் பாண்டியனிடம் படித்துக் காட்டி பரிசு (கிட்டத்தட்ட) பெறும் ’கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி’ குறுந்தொகையில் இறையனார் பாடியதாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
திருவிளையாடல் படத்தில் இந்தக் காட்சியைத் தொடர்ந்து, சிவன் நக்கீரரை இகழ ‘ அங்கம் புழுதிபட அரிவாளை நெய்பூசி, பங்கம்பட இரண்டு கால்பரப்பி சங்கதனை கீர்கீரென அறுக்கும் நக்கீரர்’ என்று சாதியைச் சொல்லித் திட்டுவது யார் எழுதியது?
கருத்து மோதலில் பலம் இழந்து போனால் சாதியைச் சொல்லித் திட்டுவது நம் கலாசாரத்தின் அங்கம் போலும்..