முப்பட்டைக் கண்ணாடியின் உலகம் –
இரா.முருகனின் புனைவுகள்
அண்மையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் பெருவிழாவில் வெளியிடப்பட்டநூல் இது.
என் படைப்புகளைக் குறித்து மிக விரிவாக என் சக எழுத்தாள நண்பர்ப்களும்,, தேர்ந்த வாசகர்களும், விமர்சகர்களும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. என்றும் கிளரொளி இளமை மின்னும் மூத்த ஆளுமைகளோடு talent to watch புத்திளைஞர்களும் பங்குபெறும் இலக்கிய ஆவணம்.
ஒவ்வொரு கட்டுரையாக வாசிக்க வாசிக்க உள்ளம் நெகிழ்ந்து போகிறது. நுண்மான் நுழைபுலம் கொண்டு என் நாவல்களை விமர்சனத்துக்கு உட்படுத்தும் இவற்றில் ஒன்று கூட வலிந்து கட்டப்பட்டு வெறும் சொற்கோலமாகப் பக்கம் நிரப்புகிறது இல்லை. வரி விடாமல் படித்துக் கருத்துச் சொல்கிறார்கள். சுவாரசியத்துக்குக் குறையில்லை. ஜெயமோகன் கட்டுரையிலிருந்து –
//முருகன் அவருடைய முன்னோர் சமையற்காரர்கள் என்று ஒரு பேட்டியில் கூறுகிறார். பேட்டியில் அவர் கூறும் வரிகளைப் பல வகையிலும் புனைவுகளை விளக்குவதற்குப் பயன்படுத்துவதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இந்த ஒரு வரி எனக்குத் தோன்றுவதுண்டு. உணவின் மேல் தேர்ச்சியும் விலக்கமும் ஒருங்கே சமையற்காரர்களிடம் இருக்கும். விருந்துகளை சுவைத்து உண்ணும் சமையற்காரர்கள் மிகக் குறைவு. பெரும்பாலும் உணவின்மேல் ஒரு விலக்கம், தொழில்ரீதியாக ஒரு ஈடுபாடு, இரண்டும் அவர்களிடம் நிகழ்கிறது. இந்தக் கதைகளில் உள்ளது சமையற்காரரின் பார்வை என்று தோன்றுகிறது. ஜடப் பிரபஞ்சத்தின் வெவ்வேறு பொருட்களை இணைத்து உருவாக்கும் ஒரு புதிய சாத்தியமும் தான் அந்தப் புதிய சுவை.
//
இசைக் கச்சேரியில் சஞ்சய் சுப்பிரமணியன் பாடிய தோடி ராகம் – தானம் – பல்லவி மனதில் நிறைந்து ததும்ப, பொறிபறக்கும் தனியாவர்த்தனம் தொடர்வது நினைவின் விளிம்புகளிலிருந்து எட்டிப் பார்க்கிறது. எனின், இந்த நூலின் கட்டுரையாளர்கள் உமையாள்புரம் சிவராமன் சார், நெய்வேலி வெங்கடேஷ், முருகபூபதி, பத்ரி போல் சிறப்பான ஆளுமைகள். நான் சஞ்சய் இல்லை தான்.
நூலில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகள் -மற்றும் எழுதியவர்கள் பட்டியல் –
1. விஸ்வரூபம் எனும் நாவல்
(சுப்ரபாரதி மணியன்)
2. இரா.முருகனும் இருபதாண்டுகளும்
(கடலூர் சீனு)
3. காலம் தப்பிவிட்ட கேலிக்காரன்
(அரவிந்தன்)
4.மிளகு – பெருநாவலை வாசிப்பது எப்படி?
(ஜெயமோகன்)
5. காலம் கலைத்துப் போடும் ரூபம்
(சௌந்தரராஜன்)
6.மூன்று விரல்களின் உலகம்
(மந்திரமூர்த்தி அழகு)
7.இரா.முருகனின் நளபாகம்
(நம்பி கிருஷ்ணன்)
8. அரசூராருக்கு ஒரு கடிதம்
(சக்திவேல்)
9. நீர்வழிப்படும் புணை
(சக்திவேல்)
10. மாயவம்சம்
(தமிழ்க்குமரன் துரை)
11.முப்பட்டைக் கண்ணாடியினூடாக
(ஜெயமோகன்)