எடுவர்ட் மனே ஓவியம் பற்றி நான் யார்க்ஷையரில் ஒரு குளிர்கால ராத்திரியில் (ஆண்டு 2003) எழுதியது. வேலையும், உழைப்பும், குளிரும், தனிமையும், வாசிப்பும், கலை அனுபவமுமாகக் கழிந்த அந்த அருமையான காலம் திரும்பாது..
எட்வர்ட் மனே-யின் ‘புல்தரையில் ஒரு மதிய விருந்து’ ஓவியம் பற்றி (இம்ப்ரஷனிச முன்னோடி)
—————————————————————–
அமைதியான ஒரு நீர்நிலை. ஆறோ, ஓடையோ தெரியவில்லை. கரையில் பச்சைப் பசேல் என்று மெத்தையாகவிரிந்த பசும்புல். நீரில் குளித்துக் கரையேறிக் கொண்டிருக்கும் ஒரு பெண்.
இதெல்லாம் பின்புலத்தில். காட்சி விரியும்போது உங்கள் பார்வையை ஈர்ப்பது, முன்னணியில், அந்தப் புல்தரையில் இருக்கிறவர்கள்.
நாகரீக உடுப்பு அணிந்த இரண்டு கனவான்கள். இருவரும் இளைஞர்கள். ஒருவர் முழு ஐரோப்பிய பாணியில் கால்சராயும், மேலே சட்டையும், கழுத்தில் டையும், மேலே கோட்டும் அணிந்து இருப்பவர். ஆனாலும் மிகக்கொஞ்சம் போல் ஆசுவாசமாகக் கையை ஒரு புறம் ஊன்றியபடி இருக்கிறார்.
மற்றவர் முகத்தில் தாடியும், பின்னால் தொங்கும் குஞ்சம் வைத்த பாரசீகத் தொப்பியும் மற்றப்படி ஐரோப்பிய உடையலங்காரமுமாக இருப்பவர். இவர் இடது கையைப் புல்தரை மேடிட்டுச் சிறிது உயரும் பிரதேசத்தில் ஊன்றியபடி வசதியாகச் சாய்ந்து அமர்ந்து, வலது கையை விரித்து நீட்டி முன்னால் சொல்லப்பட்டவரோடு எதையோசுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்.
மிக முன்னால், விதவிதமான பழங்கள், ரொட்டி என்று உணவுப் பொருட்கள்.
இது ஓர் ஓவியம்.
இது மட்டும் தான் படம் என்றால் நூற்றைம்பது வருடம் முந்திய அந்த ஓவியத்தை எல்லோரும் மறந்து போயிருப்பார்கள். அதை வரைந்த எடுவர்ட் மனே (Edouard Manet) என்ற பிரஞ்சு ஓவியரையும்.
‘புல்தரையில் மதிய உணவு’ (‘Luncheon on the grass’) என்ற இந்த ஓவியத்தை மற்ற அக்கால ஓவியங்களில் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிறவள் ஒரு பெண்.
அவள் அந்தக் கனவான்களுடன் கூட அமர்ந்திருக்கிறாள் புல்தரையில். ஆனால் அவர்களின் உரையாடலில் அவள்பங்கெடுத்துக் கொள்ளவில்லை.
பாரசீகத் தொப்பி அணிந்தவனுக்கு நேர் முன்னால் சற்றே தள்ளி அமர்ந்து ஒரு காலை ஒய்யாரமாக முழங்காலை மடக்கி, வலது கரம் முகவாயில் பதிந்திருக்க உங்களையே பார்க்கிறாள் அவள். நீங்கள் எங்கே இருந்துநோக்கினாலும் அவள் பார்வை உங்களைத் தொடர்கிறது.
என்னைத்தானே பார்க்கிறே?
உங்களைத் தோரணையாகக் கேட்கும் அவள் உடுப்பு எதுவும் உடலில் இல்லாமல் இருக்கிறாள்.
1863-ல் பாரீசில் நடந்த ஓவியக் கண்காட்சிக்காக எழுதப்பட்ட படம் இது. வரைந்த ஓவியர் எடுவர்ட் மனே(Edouard Manet) க்கு முப்பத்தோரு வயது அப்போது. பாரீசில் ஒரு பிரபுத்துவக் குடும்பத்தில் தோன்றியவர். ‘பையன் வெட்டியா எதோ கிறுக்கிட்டு கிடக்கான்’ என்று அலுத்துக் கொள்ளாமல் மனேயின் தந்தைஅவருடைய ஓவிய ஆர்வத்தைக் கண்டு கொண்டு ஓவியக் கல்லூரியில் சேர்த்தார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் ஐரோப்பாவில் பிரபலமாக இருந்தது மெய்யியலான ரியலிசத்தின் அடிப்படையில் அமைந்த ஓவியக் கலை. மனேயும் ரியலிச ஓவியராகத்தான் தன் படைப்பாற்றலை வெளிப்படுத்தத் தொடங்கினார்.
வலிய வரவழைத்துக் கொண்ட மிகையான தோற்றத்தோடு ஓவியம் வரைய மாடலாக நின்ற மாடல்களிடம் அவர்ஒரு முறை சொன்னது இது – “இயல்பாக இருங்கள். சந்தைக்கடையில் போய் முள்ளங்கி வாங்கும்போது எப்படி இருப்பீர்களோ அது போல்”.
மனேயை மரபு மிகவும் பாதித்தது. முக்கியமாக ரெம்ப்ராண்டின் கவிதை சொல்லும் ஓவியங்களில் அவர் ஆழ்ந்துபோனார். நேரம் கிடைத்தபோதெல்லாம் பாரீசு அருங்காட்சியகத்துக்குச் சென்று அங்கே பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த ரெம்ப்ராண்டின் சித்திரங்களை அப்படியே நகலெடுத்துப் பயிற்சி செய்தார்.
இப்படி மரபில் காலூன்றிய ஓவியர் மனே தான் மரபைத் துணிச்சலாக மீறி ரியலிசத்திலிருந்து அடுத்தகட்டமான இம்ப்ரஷனிசத்துக்கு நவீன ஓவியக் கலையை அழைத்துப் போக முன்கை எடுத்தவர்.
பார்ப்பதை அப்படியே ஓவியமாக வரையாமல், காட்சி தன்னைப் பாதித்ததைப் படைப்பாக்கும் இம்ப்ரஷனிசம் கால்கோள் கொண்டது மனேயின் ‘புல்தரையில் பகல் உணவு’ ஓவியம் மூலமாகத் தான்.
மனேயின் மரபு மீறல் ஓவியத்தின் பொருள் மற்றும் வடிவம் தொடர்பானது.
அதுநாள் வரை, முக்கியமாக ரெம்ப்ராண்ட் போன்றவர்கள் வரைந்த ஓவியங்களில் பிறந்தமேனிப் பெண்களாகச் சித்தரிக்கப்பட்டவர்கள் இதிகாசங்களில் வளைய வரும் கடவுள், தேவதைகள் முதலானோர்.
ஆனால் மனேயின் ஓவியம் நிகழும் காலத்தைச் சேர்ந்த ஓர் உடை துறந்த பெண்ணை ஓவியத்தின் பிரதான அங்கமாகக் கொண்டது.
இதிகாச, புராணக் காட்சிகளையே அதுவரை பிரம்மாண்டமான கான்வாசில் வரைந்து வந்தார்கள். மனே சமகாலப் பாத்திரங்களை, அதுவும் நாகரிகம் போன்றவற்றில் நம்பிக்கை இல்லாதவர்களாகத் தோற்றமளித்தநபர்களை இதிகாசப் பாணியில் பிரம்மாண்டமான ஓவியமாக வரைந்திருந்தார்.
அவர் எதிர்பார்த்ததுபோலவே ஓவியக் காட்சியில் அந்த ஓவியம் இடம் பெறமுடியாது என்று சொல்லி விட்டார்கள். கண்காட்சிக்கு வந்து, இடம் மறுக்கப்பட்ட ஓவியங்கள் பற்றிப் பத்திரிகைகள் விடாமல் எழுதவே (பிரான்சில் கலாரசனை அதிகம்), அவையும் கண்காட்சி மண்டபத்தை ஒட்டிய ஒரு அறையில் காட்சிக்குவைக்கப்பட்டன. மனேயின் ஓவியம் எந்தப் பிரதானமும் அளிக்கப்டாமல் பத்தோடு பதினொறாக அங்கே இருத்தப்பட்டது.
ஆனாலும் மண்டபத்தில் வைத்த ஓவியங்களை விட அதிக சர்ச்சைக்கும் அதன் மூலம் மேலதிகமான கவனிப்புக்கும் உள்ளாகியது மனேயின் ஓவியம்.
மனேயின் நிர்வாண நங்கை அதுவரை ஓவியம் பற்றி நிலவிய கோட்பாடுகளையும் சித்தாந்தங்களையும் வெகுஇயல்பாக உடைத்துப் போட்டாள். மனேயின் நோக்கமும் அதுதான்.
பழகிய ரசனையும் அதன் அடிப்படையான கோட்பாடுகளும் கேள்விக்கு உள்ளாக்கப்படும்போது அசௌகரியமாக உணர்கிறவர்களின் முதல் எதிர்வினை பரிகாசம். மனேயின் படத்தை எள்ளி நகையாடவே கூட்டம் கூட்டமாகவந்து பார்த்தார்கள். அதன் பாதிப்பில், நகைப்பை வரவழைக்கும் படங்கள் பத்திரிகைகளில் வெளிவந்தன.
பரிகாசத்தின் அடுத்த கட்டம் அவமதிப்பு. சீச்சி அசங்கியம் என்று சனாதனிகள் அந்த ஓவியத்தைக் கடுமையாக எதிர்த்தார்கள். மன்னன் மூன்றாம் நெப்போலியன் ஓவியக் காட்சிக்கு வந்தபோது இந்த ஓவியத்தைப் பார்க்காமலேயே கடந்து போனான்.
ஆனாலும் மனேயின் ‘புல்தரையில் மதிய உணவு’ காலம் கடந்து இன்னும் நிற்கிறது. அந்த ஓவியத்துக்கு இடம் தராமல் அன்று மண்டபத்தில் பிரதானமாகக் காட்சிக்கு வைக்கப்பட்ட பல ஓவியங்கள் காலப் பிரவாகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் காணாமலேயே போய்விட்டன.
தனக்கு அடுத்த தலைமுறை ஓவியர்களை முற்றாகப் பாதித்து, இம்ப்ரஷனிஸ ஓவியக் குழு அமையக் காரணமாகஇருந்தது மட்டுமில்லாமல், எடுவர்ட் மனே தன் காலத்தவராகிய பிரபல பிரஞ்சு எழுத்தாளர் எமிலி சோலா,கவிஞர் சார்ல்ஸ் போதலீர் போன்றோரையும் வெகுவாகப் பாதித்தவர். இலக்கியமும் நுண்கலைகளும் நெருங்கியதொடர்பு கொண்டவையாக இருப்பது தற்செயலானதில்லை.
————————————————————
மேற்கத்திய ஓவியக் கலைக்குத் தொடர்ந்து வரும் பாரம்பரியம் உண்டு. இந்திய இலக்கியம், இசை இவற்றுக்கு உள்ள பாரம்பரியத் தொடர்ச்சி இந்திய ஓவியக் கலைக்கு இல்லை என்பது சிந்தனைக்கு உரிய ஒன்று.
மேற்கத்திய ஓவியக் கலை அறிமுகமாக நான் மூன்றோ நாலோ கட்டுரைகள் எழுதி நிறுத்திவிட்டேன். ஒரு முழு நூலாக, வண்ணப் படங்களோடு மேற்கத்திய ஓவியக் கலை அறிமுகத்தைத் தமிழில் செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கு முழுக்க ஓவியத்திலும் இலக்கியத்திலும் மூழ்கித் துய்த்த அனுபவம் மிகுந்தவர் முன்கை எடுக்க வேண்டும்.
அண்ணா பி.ஏ.கே Ananthakrishnan Pakshirajan மனது வைக்க வேண்டும்.