நல்ல நண்பரும் எழுத்தாளருமான திரு.மலர்மன்னன் அவர்கள் மறைவுக்கு அஞ்சலி.
இன்று ஹிந்து பத்திரிகையில் அவர் குடும்பத்தினர் வெளியிட்ட ஆபிச்சுவரி விளம்பரத்தில் அவரை மிகவும் இளம் வயதில் எடுத்த புகைப்படத்தை வைத்திருந்தார்கள். அது யாருடைய இறப்புச் செய்தியையோ வாசிப்பது போல அனுபவத்தைக் கொடுத்தது.
நமக்குத் தெரிந்த பெரியார் தாடி வைத்த மலர்மன்னனை அவருடைய ரசிகர் ஒருவர் அதே பத்திரிகையில் அதே பக்கத்தில் வெளியிட்ட விளம்பரத்தில் பார்த்தேன். ஏதோ ஒரு ஆசுவாசம். துக்கமும்.
மலர்மன்னன் குடும்பத்தினரிடம் அவருடைய அண்மைக்காலப் புகைப்படம் கைவசம் இல்லையா? அல்லது அவரை (அவர்களும் பார்த்திருக்க முடியாத) இளைஞராகத்தான் நினைவு கொள்ள விரும்பினார்களா?
நான் இறந்த பிறகு என்னை எப்படி நினைவு வைத்திருப்பீர்கள்?
—————————————————————————————–
இன்று என்னமோ சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இறப்பு நினைவில் சுற்றிச் சுற்றி வருகிறது.
பிற்பகல் ஆச்சி (என்னோடு முன்னர் பணி புரிந்த தோழியர்) தொலைபேசினார்.
சார், உங்க சிறுகதைத் தொகுதியை ஒரு ப்ரண்ட் கிட்டே கொடுத்தேன். பெரிய புத்தகமா இருந்தாலும் ஒண்ணு விடாம படிச்சு என் கிட்டே சிலாகிப்பா. உங்களை எப்படியும் ஒருதடவை சந்திக்கணும்னு ஆசையாம்.
எனக்குக் கூட ரசிக, ரசிகைகள்!
விடுமுறை நாளில் வரச் சொல்லுங்களேன். நான் வீட்டில் இருக்கும் விவரத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்டு வந்தால் நன்றாக் இருக்கும்.
இல்லை சார், அவங்க வர்றதுக்கு இல்லை. முந்தாநாள் இறந்து போயிட்டாங்க. மாரடைப்பு.
நான் சந்திக்காது போன அந்தப் பெண்மணியின் இறப்பு இழப்புதான்.
அவர் எப்படி இருந்திருப்பார்?
————————————————————————–
சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் நிரந்தரப் பயணியும், ‘போய ஜன்மங்ஙளிலும் இனிவரும் ஜன்மங்ஙளிலும் காமுகனானு (காதலன்) ஞான்’ என்று கவிதை எழுதிய மலையாளக் கவிஞருமான டி.வினயசந்திரன் நேற்றுக் காலமான செய்தியைச் சற்று முன் மாத்ருபூமியில் படித்தேன்.
வினயசந்திரனின் லோர்கா மொழிபெயர்ப்பு பற்றி இன்னும் கொஞ்சம் தகவல் அறிய, விக்கிபீடியாவில் வினயசந்திரன் பற்றிய பக்கத்தில் தேடப் புகுந்தேன்.
D. Vinayachandran (13 May 1946- 11 February 2013)[1] was a well-known Indian Malayalam poet.
அதற்குள் யாரோ is-ஐ was ஆக்கி, காலமான தேதியையும் (நேற்று) அப்டேட் செய்திருக்கிறார்கள்.
ஜாவா குமார் குறிப்பிட்ட திருமூலர் பாடல் தான் நினைவு வருகிறது.
ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே.
– யாக்கை நிலையாமை – திருமூலர்
வினயசந்திரனுக்கு அஞ்சலிகள்.
http://www.mathrubhumi.com/story.php?id=339243
———————————————————————————————————————————————————
நான் இறந்த பிறகு எப்படி நினைவு வைக்கப் படுவேன்?
*********************************************************
கணினியில் கதை எழுதிக் கொண்டிருப்பவனாக
அலுவலகப் பணி முடித்த ஆயாசத்தோடு
கணினி சுமந்து காரில் ஏறும அலுப்போடு
காலை நடைக்கு அரைக்கால் சராய் அணிந்தவனாக
கழுவுதொட்டியில் பற்பசை உதிர்த்து
வாயைச் சுற்றி நுரை பரவ
அலறும் கைத்தொலைபேசியை எடுப்பவனாக
புத்தகத்தைப் படித்தபடி சாப்பிடுகிறவனாக
சாப்பிட்டபடி புத்தகத்தைப் படிக்கிறவனாக
காலை மூன்று மணிக்கு இணையத்தில் கார்டியன் படிப்பவனாக
ஆபீஸ் நேரத்தில் வரும் அருமை நண்பர் மொபைல் அழைப்பை
எடுக்க முடியாது குறுஞ்செய்தியில் வருந்துகிறவனாக
எந்த மந்திரமும் தெரியாது காதையும் மூக்கையும் பொத்தித் திறந்து
ஏதோ முணுமுணுத்து பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுப்பவனாக
மகனின் பேட்டியைப் பத்திரிகையில் படித்து மகிழ்ந்து சிரிப்பவனாக
சின்ன வயது மகனையும் மகளையும் வெஸ்பா ஸ்கூட்டரில்
பள்ளிக்கூடம் கொண்டு விடுபவனாக
மழைநாள் லண்டன் கிளஸ்டர்ரோடு பாதாளரயில் நிலையத்தில்
பிக்கடலி போக ரயிலுக்குக் காத்திருக்கும்
முப்பத்தெட்டாவது குடைக்காரனாக
எப்படி என்னை ஞாபகம் வரும்?
இன்னும் உயிரோடு இங்கேயே இருப்பதாக
நினைத்துக் கொள்ளுங்கள் போதும், தயை செய்து.
புகைப்படங்களைக் கவனமாகத் தவிர்த்து விடுங்கள்.
அவற்றில் உறைந்தவன் நானில்லை.
துறைஅனைத்தும் துலங்கிடவே தூயபணி செய்கின்றீர்
இறையருளால் வாழ்ந்திடுவீர் நீடு.
viswaroopam ii
endraya pozudhai Iraivanukku allithu nalaya pozhudhil amaidhiyai naadu – Thought provoking writing