எழுத்துக்கு எடிட்டிங் தேவைப்படுவது பற்றி எழுதியதைத் தொடர்ந்து…
பி.ஏ.கே அண்ணா எழுதியிருந்தார் – தன நாவலைத் தானே எடிட் செய்வது நல்லதுதான். ஆனால் அது மயக்க மருந்து கொடுக்காமல் தன் பல்லைத் தானே பிடுங்குவது போல அவஸ்தையானது என்று.
ஒரு விதத்தில் பிரசவ அவஸ்தை கூடத்தான். ஆனாலும் ஒன்றைக் கவனிக்க வேண்டும்.
இரண்டாம் நபர் எடிட்டர் கதையோட்டம், சம்பவ விவரிப்பில் குளறுபடி, பெயர்த் தவறுகள், காலம்-இடம் சார்ந்த பிழைகள், inconsistency, மரபுக்குப் பொருந்தாத, விபரீதமான அர்த்தம் கொள்ள வைக்கிற சொல்லாட்சிகள் இவற்றை எல்லாம் பற்றி எல்லாம் சுட்டிக் காட்ட முடியும். ஒரு அத்தியாயத்தின் போக்கு, தொடக்க்ம்,முடிவு பற்றிக் கருத்துச் சொல்ல முடியும்.
ஆனால், ஒரு பத்தியை அல்லது ஒரு வாக்கியத்தில் ஒரு சொல்லை எடுத்து விட்டு மற்ற ஒன்றைச் சேர்க்க, வாக்கியத்தின் தொனியே மாறிவிடுவதை எழுதியவரே எடிட் செய்யும்போதுதான் உணர முடியும். Inner rhythm மனதில் உருவாகி இருப்பதால் அந்த ஸ்வரச் சேர்க்கை இயல்பாகவே வந்துவிடும். அடுத்தவரின் படைப்பை எடிட் செய்யும் போது அந்த ரிதம் செட் ஆவது அபூர்வம். படிக்கும்போது வரலாம். அது வேறே தாளகதியாகக் கூட இருக்கலாம்.
என் நாவலில், பகவதி மறைவுக் காட்சியை காசியில் வைத்திருக்கிறேன். சொந்த சகோதரி, அன்னை, மகள் போல் அரசூர் வம்சம் நாவலில் இருந்து பகவதி என்னோடு இருந்திருக்கிறாள். அவள் இறந்தபோது மனதில் வெறுமை சூழ்ந்தது நிஜம்.
பகவதியின் இறப்பைக் குறிப்பிட்ட தொனியில் எழுத நினைத்தேன். எழுதி முடித்து எடிட் செய்யும்போது தான் அந்தத் தொனி முழுவதுமாக வந்து சேர்ந்தது. அரசூர் வம்ச பைராகிகள் சரியான நேரத்துக்கு காசிக்கு வந்து விட்டார்கள். எடிட்டரால் இதைச் செய்ய முடியாது.
பகவதி இறப்புக்குச் சில நிமிடம் முன் கங்கைப் பிரவாகத்தில் நின்றபடி அம்பலப்புழை கிருஷ்ணனை நினைக்கிறாள். அந்த வரிகளை அவர் கோவிலுக்குப் போன அத்தியாயத்தில் முன்னால் எழுதியிருந்தேன். அங்கே விட இங்கே அவை பொருத்தமாக இழைந்து வருகின்றன என்று தோன்றவே இடம் மாற்றி அமைத்தேன். எடிட்டர் செய்ய முடியாது இதை.
அந்த வரிகள் –
அவள் கங்கைப் பிரவாகத்தில் நுழைந்தாள். ஆமைகளோ எரியும் உடல்களோ அவசரப்படுத்தும் புரோகிதர்களோ பைராகிகளோ இல்லாத பெருவெளியாக விரிகிற நீர்ப் பரப்பு. தான் தொடும் எதையும் எவரையும் கறை களைவித்து தூய்மையாக்கி நிறுத்தி ஓடும் நதி. மனதிலும் உடலிலும் எல்லா அழுக்கையும் கங்கையின் பிரவாகம் கழுவிக் களையட்டும்.
மனமும் தான் எதற்கு? உடலும் தான் எதற்கு? எதுவுமே வேண்டாமே? நீ ரெண்டுமில்லையே?
கங்கை சிரித்தபடி ஓடுகிறாள்.
பகவதி கழுத்து வரை நீரில் மூழ்குகிறாள் .
அவள் கிருஷ்ணனை நினைத்துக் கொண்டாள். அம்பலப்புழை அம்பலத்தில் காலம் முழுக்க கடாட்சம் பொழிகிறவன். ஸ்ரீகிருஷ்ண சரிதமும், ருக்மிணி சுயம்வரமும், கல்யாண சௌகந்திகமுமான ஆட்டக் கதைகளோடு ஓட்டந் துள்ளிய குஞ்சன் நம்பியாரும் சம்பகச்சேரி மகாராஜாவும் தொழுது வணங்கி நின்ற மகா பிரபு.
பால் பாயசம் நைவேத்தியம் ஆகிற அம்பலப்புழை. உடன்பிறப்புகளோடும், அவர்கள் குடும்பங்களோடும் ஆடித் திரிந்து ஓடிக் களித்த வீடு.
விசாலாட்சி மன்னி. அம்மா மாதிரி, பகவதிக்கு ஓர்மையில் வராத அம்மாவை விடப் பிரியம் காட்டின தேவதை.
அப்புறம் காமாட்சி மன்னி. சிநேகாம்பா மன்னி. அண்ணாக்கள். அத்தைகள்.
இங்கே தான் எல்லோரும் எல்லாமும் இருக்கிறார்கள். இருக்கிறது. அம்பலப்புழையும் இதுதான். தூரத்தில் எரிகிறதும் எரிக்கிறதும் சிரிக்கிறதும் விலாவில் இரும்பு உலக்கையால் ஓங்கிப் புடைத்துக் கொண்டு ஓடுகிறதும்.
நான் தான் என்கிறான் கிருஷ்ணன்.
தீபம் ஒளிர மஞ்சளில் குழைத்துப் பூசிய தெய்வீகம் அழுத்தமாகக் கவிந்திருந்த சந்நிதிக்கு முன்னால் பகவதி கை கூப்பி நின்றாள். அவள் ஒரு தூசு. துகள். பிரபஞ்சத்தின் எத்தனையோ கோடானுகோடி நட்சத்திர மண்டலங்களில், அவற்றில் மையம் கொண்டு இயங்கும் அளவு தட்டுப்படாத கிரகங்களில் ஆகச் சிறிய ஒரு கிரகத்தில் ஊர்கிற, நடக்கிற, பறக்கிற, இழைகிற, உறைந்து கிடக்கிற ஏதேதோ ஜீவராசிகளில் ஒரு சின்ன உயிராக, உடம்பாக மனசாக ஒரு மகா பிரதிபை முன்னால் நிற்கிறவள் அவள்.
வானத்துக்கும் பூமிக்குமாக வளர்ந்து விசுவரூபம் கொண்டு அண்ட சராசரங்களை வளைத்து அணைத்து இன்னும் வளர்ந்து பாதாளம் தொட்டு தலைகீழாகப் புரட்டி வானம் செய்து வேடிக்கை பார்த்தபடி நிற்கிற கிருஷ்ணன் கனிவாகச் சிரிக்கிறான்.
அச்சுதம் கேசவம் ராம நாராயணம் கிருஷ்ண தாமோதரம் வாசுதேவம் பஜே.
—————————————————-
நல்ல எழுத்தாளர்கள் – பத்திரிகை ஆசிரியர்கள் தரமான எடிட்டர்களாக முடியும்.
KH சொல்வார் – ‘ பத்திரிகையில் கட்டுரை கேட்டிருந்தாங்க.. ஆமா, நான் கொடுத்தா அதிலே பாதியை வெட்டி நறுக்கிட்டுத்தானே போடுவீங்கன்னேன். அதெல்லாம் நடக்காது என்று சொன்னார்கள். தெரியும். அச்சில் வரும்போது முழுக்க வராது என்று. வந்ததும் படித்தால் எனக்கே ஆச்சரியம். நான் எழுதினது அப்படியே பிரசுரமாகி இருந்தது. ரா.கி(ரங்கராஜன்) சாரை டெலிபோனில் கூப்பிட்டு ‘என்ன ஆச்சரியம், அப்படியே போட்டுட்டீங்களே’ என்று விசாரித்தேன். அவர் சொன்னார் – நல்லா பாருங்கோ.. நடுவிலே நாலு வாக்கியம் இருக்காது.. மூணு இடத்திலே கொஞ்சம் போல் மாத்தி இருப்பேன்’.
நேர்த்தியான எடிட்டிங்குக்காக, மறைந்த ரா.கி.ரங்கராஜன் சார் மேல் அவருக்கு இருக்கும் மதிப்பு எனக்கு என் நண்பர் எழுத்தாளர் பா.ராகவன் மேல் உண்டு. அவரும் நல்ல எடிட்டர்.
——————————————-
கபாலி கோயிலில் “அதிகார நந்தி”….
“மாடமர்ந்து கற்பகமும் கோடுடைத்த பிள்ளையும்
ஆடகச் செம்பொன் அழகனும் -கூடவர
மாடவீதி சுற்றும் மயிலை கபாலீச
தோடுடைய காதன் துணை”….
(க்ரேஸி மோகன்)
வீடுண்டு தென்மயிலை வீசும்பூங் காற்றுண்டு
காடுடைய பெம்மானின் காலடியில் பேடுதனை
அம்மா எனவழைக்க ஆண்பிள்ளை ரெண்டுண்டு
சும்மாவேன் சுற்றும் சிவன்?
(இரா.மு)
‘அதிகார நந்தி’ வெண்பாக்கள் (தொடர்ச்சி)
உங்க வெண்பா உச்சக்கட்ட ஜோர்….சிவனுக்காக கச்சம் கட்டி பதில் வெண்பா….
“பாதியில் கற்பகம் பங்காய்ப் படர்ந்தது
நீதியா என்றுகேட்க நந்தியின்மேல் -வீதிக்(கு)
அவன்வந்து கேட்டான் அதிலென்ன குத்தம்
சிவனந்தக் கோயில் சொத்து”…. (க்ரேஸி மோகன்)
பதிலுக்கு பதில்
சிவன்சொத் தவன்சித் திவன்பித் தவன்சொத்
திவன்செத் திடக்கயி லாயம் எவனிருந்து
எத்தனை நாளிங்கே ஏங்கி நடப்பனோ
சொத்தாய் சிவனே சுகம். (இரா.மு)