நடேசன் பூங்காவில் அதிகாலையில் நடக்கும் போது அவை நிறைந்து யோகாசன மேடை. யோகாசனப் பயிற்சி முடித்து, யோகி ராமதேவரின் ‘யோகாசன பேக்கேஜ்’விற்பனை. ‘இது ஃபைவ் இன் ஒன் மெடிசினல் பேக்கேஜ். இந்த பேக்கேஜ்லே சேர்ந்து ட்ரெயினிங் எடுத்துக்கிட்டா சக்கரை வியாதி, மத்த நோய்நொடி அண்டாது… நாள் முழுக்க சுறுசுறுப்பா இருக்கும்.. ராத்திரி படுத்தா நல்ல உறக்கம் வரும்..அப்புறம…எக்சர்சைஸ் பண்ணினா நல்ல பசி எடுக்கும் இல்லையா. நல்லா பசி எடுத்தா அதிகமா சாப்பிடுவோம். சாப்பிட்டா இன்னும் சதை போடும். இந்த பேக்கேஜ்லே சேர்ந்தா பசிக்கவே பசிக்காது.
மத்திய, மாநில அரசுகள் அவசியம் இதை நாட்டுடமையாக்கி விடலாம். உலக அளவில் கூட பல ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் அவசியமாக, அவசரமாகத் தேவைப்படும். பிரிட்டனில், பற்ற வைத்த சிகரெட்டும் முகத்தில் வலிந்து வரவழைத்துக் கொண்ட அலட்சிய பாவமுமாக தெருமுனை குப்பைத் தொட்டிகளைக் கவனமாக ஆராய்ந்து கொண்டிருக்கும் கந்தல் கோட்டு வெள்ளைகாரர்களை பார்த்திருக்கிறேன். இவர்கள் எல்லோரும் பயன் பெற்று உய்ய யோகி ராமதேவர் உடனடியாகச் சம்மதிப்பார் என்று நினைக்கிறேன்.
அரசு தீர்க்க முடியாத பிரச்சனையை ஓரளவுக்காவது தன்னளவில் தீர்த்த வள்ளல்கள் தமிழ் மரபில் உண்டு – சிறுகுடிக் கிழான் போல.
நாடே பஞ்சத்தால் தவித்த நாட்களில் இவனை அண்டி வந்தவர்கள் எல்லோருக்கும் வயிறு நிறைய உணவு கொடுத்து அனுப்பியிருக்கிறான்.
ஏம்ப்பா பாணா, இதானே சிறுகுடி? இங்கே ஊர்ப் பெரிசு ஒருத்தர் இருக்காராமே.. ஊரே, இந்த சோழ நாடே அவருக்குக் குடும்பமாம். மனுஷர் இப்படி மாணப் பெரிசா குடும்பம், சுத்துபத்துன்னு கூட்டி வச்சுக்கிட்டுப் படற துன்பம் தாங்கலே போ.. அந்தாள் வீட்டிலே எப்பப் பாரு, யாராவது பந்தியிலே உக்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. காயைப் போடு கறியைப் போடு… சுடு சோத்தை இலையிலே வட்டிச்சுப் போன்னு ஒரே இரைச்சல்.. நாள் முச்சூடும் சோறு பொங்கறானாம்’பா.. சாப்பிட்டுச் சும்மாப் போவாங்கிறே.. சாமி நீங்க நல்லா இருக்கணும்னு வாயாற வாழ்த்திட்டு இல்லே போக வர இருப்பாங்க.. அது வேறே சத்தம்.. இங்கே பாரு..சின்னப் பிள்ளைங்க வரிசையா கையில் சோத்து உருண்டையோட வந்துக்கிட்டு இருக்குதுங்க. எறும்பு சாரி சாரியா புற்றுக்கு இரையை எடுத்துக்கிட்டு ஊரற மாதிரி இல்லே இருக்கு இது.. பசங்க எல்லாம் அவன் வீட்டுலே இருந்துதான் வர்றானுங்க.. சிறுகுடிக் கிழான் சாதாரணப்பட்ட பேர்வழி இல்லே.. மருத்துவன்.. பசி என்கிற கொடிய நோயையே இல்லாம ஒழிச்சவன்.. அவன் வீடு இங்கே தான் எங்கேயோ இருக்குன்னாங்க.. பக்கத்திலே தானா.. இன்னும் நடக்கணுமா?
சிறுகுடிக் கிழானை மனமுவந்து சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பாடியது இது. புறநானூற்றில் வருகிறது. புறம் 173.
பஞ்சத்தையும் பசிப்பிணியையும் தீர்க்க அரசனான கிள்ளிவளவன் என்ன செய்தான் என்ற கேள்வியைப் பின்னால் வைத்துக் கொள்ளலாம். இப்போதைக்குப் பாடலில் தோயலாம்.
யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய!
பாணர்! காண்க, இவன் கடும்பினது இடும்பை;
யாணர்ப் பழு மரம் புள் இமிழ்ந்தன்ன
ஊண் ஒலி அரவம் தானும் கேட்கும்;
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி,
முட்டை கொண்டு வன் புலம் சேரும்
சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப,
சோறுடைக் கையர் வீறு வீறு இயங்கும்
இருங் கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும்,
மற்றும் மற்றும் வினவுதும், தெற்றென;
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின், எமக்கே.
திணையும் துறையும் பாடாண்திணை, இயன்மொழி.
May Pannan live long for all the days that I am alive!
Singers! Will you look at how this man’s family suffers!
The sound of people who are eating can be heard like birds
chirping in a full-grown tree that is filled with fruit!
Like scattered lines of little tiny ants setting
off toward the high ground and carrying their eggs,
mindful that the time is coming when the rains that
do not fail will fall, children in large families go
here and there carrying rice in their hands. We see them
and having seen them, over and over again we ask,
“Give us a straight answer, is the house
of that physician who cures hunger nearby or far away?”
Translated by Professor George Hart
http://learnsangamtamil.com/purananuru/