(ஏப்ரல் 16 2013 செவ்வாய் – இரவு 9:20)
சென்னை ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ஏசி முதல் வகுப்பு. வெளிச்சம் ஆகக் குறைந்த அந்த குறுகிய கூப்பேயில் சக பயணி எனக்கு முன்பே வந்திருந்தார்.
முகம் தெரியாத அரையிருட்டில் அவர் மொபைலில் பேசியபடி உட்கார்ந்திருந்தார். சரி, இன்று இரவு முழுக்க இவருடைய பேச்சுக் கச்சேரியைக் கேட்டபடி தான் உறங்க வேண்டி வரும்.
இருக்கையில் வைத்த என் மொபைல் சத்தமின்றி மெல்ல அதிர்ந்ததை நான் கவனிக்கவில்லை. ஷார்ட்ஸுக்கு மாற பெட்டியில் இருந்து உடுப்பை எடுத்துக் கொண்டிருந்தேன்.
சார், உங்க போன் ..
சகபயணி நட்போடு சுட்டிக் காட்டினார்.
பேசி முடிக்கும் வரை அவரும் தன் உரையாடலில் மூழ்கி இருந்தார்.
‘சாகித்ய அகாதமிக்குப் பேப்பர் அனுப்பணும். இது பி.எச்.டி தீசிஸ்.’
பி.எச்.டி தீசிஸ் தலைப்பைச் சொன்னார். காதில் விழுந்தபோது அவரைப் புது மரியாதையோடு நோக்கினேன். ’சிலப்பதிகாரத்தில் கறிகாய்கள்’, ‘சீவகசிந்தாமணியில் மரங்கள்’ என்றபடிக்கு ரொட்டீனாக இல்லாமல், தமிழ் நாடக மேடை, அதில் பிறமொழி இலக்கிய, நாடகத் தாக்கம் பற்றிய ஆழமான ஆய்வு.
பரஸ்பரம் அறிமுகப் படுத்திக் கொண்டோம். ‘உங்க சிறுகதைத் தொகுதி படிச்சிருக்கேன் சார்’ என்றார்.
‘உங்க படமும் நிறையைப் பார்த்திருக்கேன் சார்.. கே.பாலசந்தர் சார் படங்கள்லே ஒண்ணு விடாம நீங்க இருப்பீங்களே ..ஆனா திரையிலே இருக்கறதுக்கும் இப்போ உங்க பெர்சனாலிடியா தெரிஞ்சுக்கறதுக்கும் நிறைய வேற்றுமை இருக்கே’.
நான் சிரித்தபடி திரு சார்லி கையைக் குலுக்கினேன்.
காமெடியன். சிந்துபைரவி, சிகரம், ஒரு வீடு இரு வாசல், இன்னொரு வசந்தம் என்று எத்தனையோ படங்களில் நகைச்சுவையும் அப்பாவித்தனமுமான பாத்திரங்கள்.. படிப்பு எம்.ஏ, எம்.பில். இப்போது பி.எச்.டி ஆய்வு மாணவர்.
தமிழ்த் திரையில் நகைச்சுவை நடிகர்கள் பற்றி எம்.பில் ஆராய்ச்சி செய்ததாகத் தெரிவித்தார். காளி என் ரத்தினம், புளிமூட்டை ராமசாமி என்று ஏகப்பட்ட தகவல்கள் (’வீணை எஸ்.பாலசந்தருக்கு ஒரு நகைச்சுவை நடிகர் பின்னணி பாடியிருக்கார் தெரியுமா? பாட்டு – கல்யாணம்…. ஆஹா கல்யாணம்’.. பாடினது சந்திரபாபு’).
பார்சி தியேட்டர், பாய்ஸ் கம்பெனி, என் நாவல்கள், சிறுகதைகள் பற்றி எல்லாம் பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை. கிட்டத்தட்ட நள்ளிரவு. நான் காலை எட்டு மணிக்கு சிவகங்கையில் இறங்க வேண்டும். அவர் ஆறரைக்கு புதுக்கோட்டையில்.
ஷூட்டிங் போறேன் சார் என்றார்.
புதுக்கோட்டையில் என்ன ஷூட்டிங் என்று விசாரித்தேன்.
ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’ நாவல் படமாகிறது. நான் தான் அதில் கந்தன்’.
வித்தியாசமான நண்பர்களின் பரிச்சயம் இரவு பதினோரு மணிக்குக் கூடக் கிடைக்கலாம்…
———————————-
17 ஏப்ரல் 2013 புதன் கிழமை
தேசிய இயக்கத் தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான பாகனேரி திரு எஸ்.ஒ.எஸ்பி.உடையப்பா அவர்களின் 108-வது பிறந்த தின மலரைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.
திரு உடையப்பாவை முன் வைத்து, சிவகங்கைச் சீமையின் மற்ற சுதந்திரப் போராட்ட தியாகிகளைப் பற்றிய குறிப்புகள் நிறைந்த ஆவணமாக இதைத் தயாரித்து அளித்தவர் எங்கள் தலைமை ஆசிரியர் வெங்கடகிருஷ்ணன் சார்.
மலரில் பக்கத்தைப் புரட்டும்போது சட்டென்று கண்ணில் பட்ட பெயர் ‘காந்தி வீதி கண்டியா பிள்ளை’.
எப்படி மறந்தேன் அவரை?
தையல் தொழிலாளி. நீர்க்காவி ஏறிய கதர் வேட்டியும், சட்டையும் தான் கோலம். நான் பள்ளி போகிறபோது ‘உங்க அப்பா எங்கேடா இருக்கான் இப்போ’ என்று விசாரிப்பார். அப்பாவை அவன் என்று சொல்ல அவருக்கு உரிமை இருந்ததாகப் பாட்டி சொல்லித்தான் புரிந்து கொண்டேன்.
‘கண்டிப்பயலா? நம்ம திண்ணையிலே தான் உங்கப்பா, சாமிநாதன், அவன் எல்லாப் பசங்களும் விளையாடிண்டிருப்பா’ என்று சட்டென்று அவள் 1930-களுக்குப் போய் விடுவாள்.
அவள் குறிப்பிட்ட அப்பாவின் இன்னொரு அடாபுடா நண்பர் சாமிநாதன், கோமதி சுவாமிநாதன் என்ற புனைபெயரில் நகைச்சுவைக் கதைகள் ஏராளமாக எழுதிய சிவங்கையின் மூன்றாவது எழுத்தாளர். சிவகஙகையின் முதலாம் எழுத்தாளர் பிச்சைக்குட்டி ஐயர் (வசன சம்பிரதாயக் கதை); அடுத்தவர் கவியோகி சுத்தானந்த பாரதியார் (அல்லிக் குளம் முதலிய கதைகள்).
கண்டியா பிள்ளைக்குத் திரும்புவோம். நான் பத்து வயதில் பார்த்தபோதே அவர் ஏழையாகத்தான் இருந்தார். கல்லூரி முடித்து வேலையில் சேர்ந்தபோது பரம ஏழையாகி இருந்தார்.
சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றிருந்தாலும், என்ன காரணமோ அவருக்கு தியாகி பென்ஷன் மறுக்கப்பட்டது.
புறாக் கூண்டு போல் ஒரு அறையை அடைத்துக் கொண்டு பழைய தையல் எந்திரம். பக்கத்தில் சுருட்டி வைத்த சேலையோ, சட்டையோ.
அவரிடம் யாரும் புதுத் துணி தைக்கப் போட்டுப் பார்த்ததில்லை. கிழிசல் உடுப்பும் தலையணை உறையும் தான் அழுக்கும் கசங்கலுமாக ‘மூட்டித் தர’ வரும்.
வறுமையிலும் அவர் முகத்தில் சிரிப்பைத்தான் எப்போதும் பார்த்திருக்கிறேன். எப்போதும் குதூகலம். மனதுக்குள் மகிழ்ச்சிகரமாக ஏதோ சதா நிகழ்ந்து கொண்டே இருக்கும் போல.
சுதந்திர தினம், குடியரசு தினம் வந்தால், எப்பாடு பட்டோ வெள்ளை, பச்சை, ஆரஞ்சு வர்ணத் துணி வாங்கி வந்து, சன்னமான துண்டுகளாக நறுக்கி சின்னஞ்சிறு மூவண்ணக் கொடி மூவண்ணக் கொடியாக தையல் எந்திரத்தில் ஓட்டி ஓட்டித் தைப்பார். தீக்குச்சியை நீல மசியில் தோய்த்து ஒவ்வொரு கொடிக்கும் நடுவே அவர் வரைவது எப்படி இருந்தாலும், கம்பீரமான அசோக சக்கரம் தான்.
பள்ளிக் குழந்தைகளைக் கூப்பிட்டுக் கூப்பிட்டுத் தைத்த கொடிகளை அவர்கள் சட்டையில் குத்தி விடுவார். அப்போது அவர் முகத்தில் குழந்தைத் தனமும் ஆனந்தமும் தெரியும். நாங்கள் தீபாவளி, பொங்கலுக்கு வருடா வருடம் உற்சாகப்பட்டது எல்லாம் அதோடு ஒப்பிட்டால் உப்புப் பெறாது.
நான் வேலைக்கு சேர்ந்த நேரத்தில் ஒரு குடியரசு தினத்தில் கண்டியா பிள்ளை கையால் கொடி வாங்கிக் குத்திக் கொண்டேன். அவருக்கு சிறு தொகை அவ்வப்போது தருவது வழக்கம். அந்தத் தடவை கொடியை வற்புறுத்திக் கண்டியா பிள்ளையிடம் காசு கொடுத்து வாங்கியதால் எனக்கும் மகிழ்ச்சி.
இரண்டு மாதம் கழித்து அவரை மறுபடி சந்தித்தேன். கடை பளிச்சென்று சுத்தமாக இருந்தது. கிழிந்த துணி கூட தைக்க வந்திருக்கவில்லை. முகத்தில் பசிக் களைப்பு. அதையும் மீறு உற்சாகம்.
தயங்கித் தயங்கி நான் கொஞ்சம் பணம் கொடுத்தேன். அவர் என்னையும் தையல் எந்திரத்தையும் மாறி மாறிப் பார்த்தார். ஒரு வினாடி கண்ணில் நீர் கோர்த்ததைக் கண்டேன். சட்டென்று தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.
‘சுதேசிய ராட்டினமே காந்தி கை பாணம்
நம்மைக் காக்கும் பிரமாணம்’
என்று அவருடைய தலைமுறையின் தேசியப் பாடல் ஒன்றை குரல் நடுங்கப் பாடினார்.
கொடுக்க அவரிடம் அப்போது அந்தக் குரலும் பாடலும் தான் இருந்தது.
வெற்று தையல் மிஷினின் கால் பலகையை ஆர்மோனியம் போல் காலால் மிதித்தபடி அவர் பாடிய அந்தத் தினத்துக்கு அப்புறம் நேரு பஜார் மூக்கக் கோனார் ஜவுளிக் கடையில் சபரிமலை போக சாய வேட்டியும், பை தைக்கத் துணியும் வாங்கிய ஒரு மாலை நேரம்.
கண்டியா பிள்ளை கடை நினைவு வர, காந்தி வீதிக்கு நடந்தேன். கடை மூடி இருந்தது.
அது அப்புறம் திறந்திருந்ததாக நினைவு இல்லை.