Foot loose on red soil – 2 : Rajam Iyengar, DS and othersசெம்மண் சுவடு -2 : ராஜம் அய்யங்காரும் ’டி.எஸ், பரமக்குடி’யும்

அரசூர் சுவாரசியமான கிராமம். எங்கள் குலதெய்வம் ஐயனார். பூசாரியார் வேளார். கோவில் மேற்பார்வையாளராக இருந்தவர் (காலம் சென்ற) கிராம கர்ணம் ராஜம் அய்யங்கார்.

அய்யங்காரை நான் சிறு வயதில் அரசூர் சென்றபோது பார்த்திருக்கிறேன். கெச்சலான, கொஞ்சம் கீச்சுக் கீச்சுக் குரலோடு எகிறி எகிறி நடக்கிற சிவப்புத் தலைமுடிக்காரர். (என் மனதில் என்னமோ அப்படித்தான் பதிவாகி இருக்கிறது).

அய்யங்கார் வீடு சிதிலமாகி இருக்கிறது. அவருடைய மகன் ஏசுதாஸ் தரங்கிணி குழுவில் இருந்ததாக அய்யங்கார் சொல்லிய நினைவு. சென்னையோடு போயிருக்கலாம்.

அய்யங்கார் வீட்டுக்கு நேர் பின்னே ஒரு காளி கோவில். நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது. இன்னொரு வேளார் கவனித்துக் கொள்கிறார்.

அவரோடு பேசிக் கொண்டிருந்தேன்.

‘இந்தக் காளியாத்தா இருக்குதே.. ஐயருக்கு (அய்யங்கார்) ரொம்ப வேண்டப்பட்டது. வெள்ளன எளுந்திருச்சு சாமி அவுக பல்லு வெளக்கிட்டு நிக்கறாக.. பின்னாடி ஏதோ சத்தம்.. ஆருங்கறீங்க..ஆத்தா உக்காந்திருக்கா.. என்னம்மா விசயம்னு வாயிலேருந்து வேப்பங்குச்சியை எடுத்துட்டு ஜாரிக்கறாரு ஐயர்சாமி.

ஒண்ணுமில்லேடா.. தெனம் பொங்கல் வெள்ளைச் சோறுன்னு படைச்சு வச்சதைத் தின்னு அலுத்துடுச்சு. அதான்..

அதான்னா என்ன அர்த்தம்?

நாக்குக்கு ருசியா இத்தினி கவிச்சி, ரத்தம்..

தோ பாரு.. நீ எங்க அம்மா .. வீட்டுப் பெரியவ.. நாங்க சாப்பிடறது, புழங்கறதுதான் உனக்கும்..

எப்பவுமா கேக்கறேன்? எப்பவாச்சும் ஒருக்கா தானே..

அதான் சொல்றேனே.. இங்கே எல்லாம் இப்படித்தான்.. சைவம் தான் எல்லாம்.. எனக்கு இல்லாட்டாலும் உனக்கு முதல்லே கொடுப்பேன் எப்பதிக்கும்.. சரிப்படும்னா இரு.. இல்லியோ..

அட ஏன் கோவிச்சுக்கறே..வேணாம்னா விடேன்.. நானும் தான் வேறே எங்கே போக? உங்களை எல்லாம் கவனிச்சுக்கிட்டு இங்கியே இருக்கேன்..

ஐயர் வாய் கொப்பளிக்கும்போது பின்னால் யாரோ நகர்ந்து போன ஒச்சை.
சாயந்திரம் ஐயர் மவன் சடார்னு சரிஞ்சுட்டான். திரேகம் கெடந்து துடிக்குது. கோழி அறுத்துக் கொண்டாங்க.. ஆடு அடிச்சுக் கொண்டாங்கன்னு ஒரே பொலம்பல்.. ஐயர் நேரே பின்னாடி போனார்.. ஆத்தாவைப் பாத்து சத்தம் போட்டார்.. என்னமோ எங்களைக் கவனிச்சுக்கறேன்னே.. இதானா நீ கவனிச்சுக்கறது? பேசறது ஒண்ணு செய்யறது ஒண்ணா?

துண்ணூறை அள்ளிக்கிட்டு ஐயர் வீட்டுக்குள்ளாற வரக்குள்ள பையன் சௌகரியா படுத்து தூங்கிட்டான். எல்லாம் பொறவு சரியாப் போயிடுத்து..

வேளார் பேசி முடித்தார்.

அடுத்த நாவலை எழுதி முடித்த நிறைவு எனக்கு.

வேளாரும், அய்யங்காரும், காளியும், அரசூரும் எனக்கு போதித்தது மேஜிக்கல் ரியலிசத்தின் பால பாடம்.

————————————————-

காளையார்கோவில் அருகே, நாலாம் தலைமுறை பிராமண கிறிஸ்துவர் ஒருவரை சந்திக்க அவருடைய அச்சகத்துக்குப் போயிருந்தேன். உள்ளே புத்தகம் புத்தகமாக அச்சடித்து அடுக்கியிருந்தது.

ஒன்றை எடுத்துப் பிரித்துப் பார்த்தேன். புத்தகம் இல்லை. திருமண அழைப்பிதழ். அழைப்பிதழ் என்னமோ ஒரு பக்க நீளம் தான். ‘உங்களை அன்போடு வரவேற்கும் உறவினர்கள்’ பட்டியல் தான் பாக்கி ஒன்பது பக்கம். இந்துப் பெயர்களும், கிறிஸ்துவப் பெயர்களுமாக மாப்பிள்ளை – பெண் பக்க தாய் மாமன், சிற்றப்பா, பெரியப்பா என்று வரிசையாக உறவினர் பட்டியல்.

அச்சகத்தின் கண்ணாடித் தடுப்புக்கு அந்தப் பக்கம் இரண்டு இளைஞர்கள் கம்ப்யூட்டரில் ஒரு திருமண அழைப்பை வரிவரியாக சரி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

‘யார் பெயரும் விட்டிருந்ததோ, இல்லே பெயரிலே, ஊரிலே, உறவு சொல்றதிலே அச்சுப் பிழை இருந்ததோ, கொலை கூட விழலாம்’.

அச்சக உரிமையாளர் சிரித்துக் கொண்டே சொன்னார். எனக்கு பயமாக இருந்தது. நிஜமாகவே ப்ரிண்டர்ஸ் டெவில் தான்.

‘பேசாமா வாக்காளர் பட்டியல் வாங்கி பின்னிணைப்பா கொடுத்திடலாம் போல இருக்கு’ என்றார் ப்ரூப் கொண்டு வந்து வைத்த முதிய தொழிலாளி ஒருவர்.

அதானே.

———————————————————————-

காளையார்கோவில் பக்கம் கண்ணில் பட்ட பழைய போஸ்டர் ஒன்று –

அரிமா திரு…… பேத்தி காதணி விழா சிறக்க வருக வருக

லயன்ஸ் கிளப் உறுப்பினர் அரிமா திரு என்றால் ரோட்டரி கிளப் உறுப்பினர் சகடத் திருவா?

——————————————————–

சிவகங்கை போஸ்டர்களின் நகரம். அரண்மனை வாசலில் கண்ணில் பட்ட ஒரு போஸ்டர் –

மலேசியாவுக்கு உடனடியாக ஆட்கள் தேவை.

சப்ளையர் – மாத சம்பளம் ரூ 20,000

புரோட்டா மாஸ்டர் – மாதம் 30,000

சமையல்காரர் – மாதம் 40,000

Parotta master – role, responsibilities and KPAs please..

———————————————————-

பாகனேரி சுதந்திரப் போராட்ட தியாகி திரு எஸ்.ஓ.எஸ்பி. உடையப்பா 108-ம் ஆண்டு மலரை அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என்று படித்துக் கொண்டிருக்கிறேன். கண்ணில் பட்ட செய்தி –

//வக்கீல் அமரர் டி.சீனிவாச அய்யங்கார் மிகச் சிறந்த காங்கிரஸ் தொண்டர். விடுதலைப் போராட்ட வீரர். சத்தியமூர்த்தி, ராஜாஜி, உடையப்பா, குமாரசாமி ராஜா போன்றோரின் நெருங்கிய தோழர். திரு உடையப்பா ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராக இருந்தபோது துணைத் தலைவராகப் பணியாற்றியவர். ‘D.S, பரமக்குடி’ என்று மட்டும் விலாசம் எழுதித் தபாலில் அனுப்பப்படும் கடிதங்கள் இவரைத் தவறாமல் சென்றடைந்து விடும்.//

D. S அவர்களிடம் ஒரு பத்திரிகை நிருபர் கேட்டார் – நீங்க கமலஹாசனோட அப்பாவா?

D.S : கமல் ஹாசன் என் மகன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன