நண்பர் காஞ்சி ரகுராம் அவர்களை விஸ்வரூபம் நாவல் வெளியீட்டு நிகழ்ச்சியில் சந்தித்தேன். விஸ்வரூபத்துக்கு முந்தைய நாவலான அரசூர் வம்சம் நூலுக்கு அவர் அனுப்பி வைத்திருக்கும் விமர்சனம் இது. நன்றி ரகுராம்.
அரசூர் வம்சம் குறித்து – காஞ்சி ரகுராம்
——————————————————-
It was pleasant to meet you at your Vishwaroopam novel release function. It was even more pleasant to buy the book with your signature :).
அரசூர் வம்சமும் வாங்கினேன். அதைப் படித்த திளைப்பில் விமர்சனமும் எழுதினேன் :)….
கற்பனை. இதன் வளத்தையும், ஆற்றலையும் கொண்டு, தனக்கென ஓர் உலகைச் சிருஷ்டிக்கும் லயம் ஒரு மனிதனுக்கு வசப்பட்டு விட்டால், காலத்தின் வரிசைகளைக் கூட மாற்றியமைத்து அதில் தன்னிஷ்டம் போல் சஞ்சரிக்க முடியும். அப்படி காலம் மூன்றையும் ஸ்டெம்புகளாக நட்டு, இரா. முருகன் சார் ஆடிய மேட்ச் – அரசூர் வம்சம் – நாவல்.
2004-ல் வெளிவந்த நாவலுக்கு, இப்போது எதற்கு விமர்சனம்?
அவருடைய சமீபத்திய நாவல் – விஸ்வரூபம். அதன் வெளியீட்டு விழாவிற்கு என்னையும் அன்போடு அழைத்திருந்தார். எண்ணற்ற இலக்கியம் படைக்கும் அவர் கையெழுத்துடன், வாழ்த்தெழுத்துடன் அந்நாவலை வாங்கினேன். அது அரசூர் வம்சத்தின் தொடர்ச்சி.
அரசூர் வம்சம் இப்போது படித்ததால் விமர்சனம்.
அரசூரில், சிதிலமடையும் ஜமீன் அரண்மனையில் துவங்குகிறது நாவல். பிரிட்டீஷிடம் நிர்வாகம் சென்றபின், எந்த அதிகாரமும் இன்றி, செல்வமும் நீர்த்து, சாதாரண தம்பதியாய், ஒப்புக்கு மட்டுமே ராஜா-ராணி பட்டம் வைத்திருப்பவர்களே முதல் பாத்திரங்கள்.
‘குளிக்கும் போது எல்லாரும் பார்க்கிறார்கள்.’ நாவலின் முதல் வரியை, ராணியின் முதல் வாக்கியத்தைப் படிப்பவர்களின் மனம், வேறெங்கோ செல்லும். ஆனால்…
ஆண்ட வம்சமே ஆயினும், அதன் செல்வத்தில் எழுந்த மாளிகைக் கூட, ஒரு நாள், வசதியின்றி, வம்சமின்றி, கால் சுவடின்றி, வவ்வால்களின் கூடமாகும் என்ற காலத்தின் நியதியை, இங்கிருந்து படம் பிடிக்கத் தொடங்குகிறார் முருகன் சார்.
அருகில் வேறு கட்டிடம் உயர, அரண்மனைக் குளத்தில், சுபாவமாக ராணி நீராட மறைப்பு ஏற்படுத்தக் கூட, ராஜாவின் கஜானாவில் இருப்பில்லை. அவர், விசாலமான முன் மண்டபத்தில் நடக்கும் போது, காரை பெயர்ந்து விழுகிறது. ஒரு காலத்தில் வாளும், வேலும் அடுக்கப்பட்ட ஆயுத சாலை, சாரட் வண்டி நிறுத்திய காடிகானா, குதிரை லாயம்… இவ்விடங்களையெல்லாம், புகையிலை வியாபாரம் செய்யும் குடும்பத்திற்கு, வாடகைக்குக் கிடங்காய் ஒதுக்கும் ராஜாவின் நிலை… சேரனின் ஆட்டோகிராப் படத்தில், யானைகளைக் கட்டி உணவிட்ட கோபிகாவின் குடும்பம் பின்னாளில் நிர்க்கதியாகும் காட்சிக்கு ஒப்பாகி, படிப்பவர் மனசை அசைக்கிறது (படம் வந்ததும் 2004-ல்!). ஆனால் இதனை நகைச்சுவை ஊசியில் கோர்த்துத் தந்தது, முருகனின் சொல்வண்ணம். இங்கு மட்டுமல்ல முழு நாவலுமே அவரது மொழி நடை வனப்பிலும், சொற் செல்வத்திலுமே வளர்க்கப்பட்டிருக்கிறது.
சிறிய கதை. மதிப்பிழந்த ராஜாவிற்கு, பின்னாளில் சிறிது மதிப்பு வருகிறது. வாரிசு பிறந்து வம்சம் தொடர்கிறது. அடுத்த வீட்டிலிருக்கும், புகையிலையும் மூக்குப் பொடியும் விற்கும் சுப்பிரமணிய அய்யரின் சின்னப் பிள்ளை சங்கரனுக்கு, அம்பலப்புழையில் இருக்கும், கரண்டி பிடிக்கும் கிட்டாவய்யனின் இளைய சகோதரி பகவதிக் குட்டியை, பெண் பார்த்து மணம் முடிக்கப்படுகிறது. இவ்வளவுதான்.
இதற்குள் பல பாத்திரங்களைப் படைத்து, பிரயாணங்களை அமைத்து, சம்பவங்களைப் பிணைத்து, ஒவ்வொன்றையும், நிதானமாக விவரிப்பதில் கதை முழு நாவலாகிறது. ராஜாவின் மாமனார் புஸ்தி மீசைக் கிழவனின் மரணம் மட்டுமே நான்கு அத்தியாயங்களுக்கு நீள்கிறது. ஆனால் இழவு வீட்டிலும் சிரிப்பொலிகள் கேட்கும் காட்சிகள், இந்நாவலில் மட்டுமே சாத்தியம்.
நாவலின் பிரதான கட்டமைப்பு மாந்திரீக யதார்த்தம்.
முன்னோர்கள் பிரேத ரூபமாய் ராஜாவுடன் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். நித்ய சுமங்கலி சுப்பம்மா கிழவியின் மூலம், அவள் செல்லுமிடமெல்லாம், அவ்விட மொழியில், மூத்த குடி பெண்கள், பேசுகிறார்கள். பாடுகிறார்கள். சங்கரனுக்கு முன்னவன், சாமிநாதன். சாம வேதம் கரைத்துக் குடித்தவன். மன நிலை பிறழ்ந்தவன். எரியும் தன் வீட்டில், முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பெண்ணிடம், பசுஞ்சாணத் தரையில், சம்போகத்தில் ஈடுபட்டபடியே, அக்னியை வரவேற்றுச் சாம்பலாகிறான்.
மந்திர இயந்திரங்களும், அதில் குடிபுகும் தேவதைகளும், அவைகளுக்குள் சண்டையும் கூட உண்டு. இவற்றுடன் பிற்காலத்தில் பிறக்கப் போகும் பனியன் சகோதரர்களும் வருகிறார்கள். இனிமேல்தான் கண்டுபிடிக்கப் போகும் இசைத்தட்டு, கேமரா, ஆஸ்டின் கார்… போன்றவற்றை ராஜாவுக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்.
இவைகளையெல்லாம் பிராமண பாஷையில், சொற்களின் நெளிவு சுளிவுகளுடன், வழக்கொழிந்து போன சொற்களையும் இழைத்து, சின்னச் சின்ன வாக்கியங்களாக, ஏன் ஒரு வார்த்தைத் தொடர்களாகவும் அமைத்து நாவலை வடித்திருக்கிறார். ஓர் உதாரணம். பிரேதப் பெண் பசியால் அரற்றுமிடம்: இப்ப சாதம் கொண்டாடி. க்ஷேத்ரத்துலே தேவி மாதிரி இருக்கே விசாலாட்சி. விசாலி. சாலாச்சி. சாலு. சாலும்மா. துரைசாமி ஐயன் மாதிரிக் கொஞ்சறேன். கெஞ்சறேன். பசிக்கிறதுடீ.
ம்ம். இந்நாவலின் களம் வேறு. தளம் வேறு. தளை வேறு. உணர்ந்து படித்தால், ரசனை கொஞ்சும். தவறினால் ஆயாசம் மிஞ்சும்.
நாவலின் மற்றொரு ரசம், சிருங்கார ரசம். பெருவாரியான ஆணின் மனது, சம்போக சுகத்தில் எண்ணமிட்டபடியே சுழல்வதை அப்படியே நாவலில் இறக்கியிருக்கிறார். பல இடங்கள் சிரிக்க வைக்கின்றன. சில இடங்கள் சுளிக்கவும் வைக்கின்றன. தவிர்த்திருக்கலாம்.
அடுத்த ரசம் ருசி. கம்பங்களி, வரகரிசி, வெல்லப் பானகம், லட்டு உருண்டை, நெய்யப்பம்… அங்காங்கே பதார்த்தங்களை அடுக்க, நம் நாவில் உமிழ் வெள்ளம்.
கதையின் அனைத்து வழிகளும் சுபமாக முடிந்ததில் மகிழ்ச்சி. இன்னும் வேண்டுமேயென ஏக்கம் கூடுகிறது. பாதகமில்லை. கதை விஸ்வரூபத்தில் பிரம்மாண்டமாய்த் தொடர்கிறது. படிக்க ஆவலாய் இருக்கிறேன்.
காஞ்சி ரகுராம். 🙂