Saturday scribblingsமாயன மன்னு வட மதுர மய்ந்தன

காலை நேரச் சென்னை மாநகரம்.

அது ஹோட்டல்களின் மூடிய கதவுகளுக்குப் பின் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டபரா டம்ளர்களை அலம்பிச் சரசரவென்று சரித்து அடுக்கும் ஓசையாலும், கோயம்பேட்டிலிருந்து காய்கறி ஏற்றி வந்த மினி வேன்கள் பூங்கா பக்கம் அவற்றை நாலு நல்ல வார்த்தைகளோடு இறக்கி விட்டு போகிற சத்தத்தாலும், ‘ஆகட்டும், சீக்கிரம் வாங்க, பஸ் எடுக்கணும்’ என்று திருப்பதி தினசரிப் பயண பஸ் டிரைவர்கள் அவசரமாக ஓடி வரும் பக்த கோடிகளை இன்னும் பதற்றமடைய வைக்கும் குரல் ஒலியாலும் ஆனது.

காட்சி ரூபமாக, கண்ணாடிக் கதவுகளுக்குப் பின் இனிப்பு வகைகள் அரை வெளிச்சத்தில் தட்டுப்பட, வாசலில் உட்கார்ந்தபடி தூங்குகிற நேப்பாளி கூர்க்காக்கள் காவல் இருக்கும் மிட்டாய்க் கடைகளாலும், அரை மணி நேரம் முன்பு ஒட்டிய ‘வணிகர் சஙக்த் தலைவர் அழைக்கிறார்’, ‘மறைந்த தோழருக்கு ம.க.இ,க அஞ்சலி’, ‘தினகரனோடு இலவச இணைப்பு – திரைக்கதை எழுதுவது எப்படி?’ போஸ்டர்கள் அப்பிய சுவர்களாலும் ஆனது.

வாடை ரூபமாக, வண்டிகளில் வைத்துத் தள்ளிப் போய் முதல் வெட்டு விழுந்து தென்னை மர வாசனையோடு கண் திறக்கும் இளநீர்க் காய்களும், பூங்கா வாசல் ஸ்டாலில் சுடச்சுட வந்திறங்கிய தக்காளி சூப்பும், திருப்பதிப் பெருமாள் கோவில் வாசலில் மிகக் கொஞ்சம் போல மணக்கும் சாமந்திப் பூ நறுமணமும் ஆனது.

அப்புறம், … விடிவதற்கு முன்பே தொடங்கும் கோடை வியர்வை அருவிகளால் ஆனது சென்னைக் காலை.

இன்றைக்கு பூங்கா நடை முடித்து, வியர்த்து விறுவிறுத்து திருப்பதி பெருமாள் கோவில் வழியாகப் போய்க் கொண்டிருந்தபோது, கோவிலில் இருந்து கன கம்பீரமாக பிரபந்த ஒலி. திருப்பாவை.

பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட,
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய்,

உச்ச ஸ்தாயியில் உரிமையோடு, அதிகாரத்தோடு அழைக்கிற குரல். தொடர்ந்து அதே வரிகளைக் குரல் தணித்து மென்மையாக ஒலிக்கிற இன்னொரு குரல்.

மார்கழியை வைகாசி மாதத்தில் மனதில் கொண்டு வந்து நிறுத்துகிறவர்கள் அரையர்களா, பிரபந்த கோஷ்டியா? யாரோ, வாழ்க அவரெலாம்.

இது அழுத்தந் திருத்தமான தமிழ். பிரபந்தத்தை பெருமாளுக்கு நோகாமல், ‘மாயன மன்னு வட மதுர மய்ந்தன தூய பெருநீர் யமுனத் துறவன’ என்று ஐகாரம் கூட அழுந்தாமல் பாடுகிற பந்ததி இல்லை.

உடையவர் இப்படித்தான் பெரிய நம்பிகளின் திருமாளிகை வாசலில் அனுசந்தானம் செய்து கொண்டு நிற்க, அத்துழாயாக நப்பின்னை தோன்றி இருப்பாள்

பின்னணியில் மடேடர் வேன்களில் இருந்து காய்கறி இறக்கிக் கொண்டிருக்க மாட்டார்கள்.
————————————————————–
குழந்தைக்குக் காதணி விழா. நூறு பேர் கூடி இருக்கத் தோதான ஒரு சிறிய மண்டபத்தில் நடக்கிறது. சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்து குழந்தையை மடியில் இருத்திக் காது குத்தும் போது நாலைந்து உறவினர்கள் கர்ம சிரத்தையாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தட்டுக்களில் கரண்டியால் தட்டி ஒலி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். மங்கல ஒலியாம்.

இந்த மாதிரி சிறிய வீட்டு விசேஷங்களில் மண்டப வாடகை, சாப்பாடு என்று நாற்பதிலிருந்து ஐம்பதாயிரம் வரை ஆகிறது. கூட ஒரு ஆயிரம் செலவழித்து ஒரு நாதசுவர இசைக்கு ஏற்பாடு செய்யாமல் எதற்கு இந்த ‘டப்பா தட்டி முகூர்த்தம்’?

நாதசுவர, தவில் கலைஞர்கள் அருகி விட்டார்கள். கர்னாடக இசை சபா இசையாக மாறிய பிறகு அது இவர்களுக்கு சோறு போடுவதில்லை. பலரும் வேறு தொழிலுக்க்குப் போய் விட்டார்கள். விடாப்பிடியாக சில நலிந்த கலைஞர்கள். ஏதோ நம்பிக்கையில் நாதசுவர இசைக் கல்லூரியில் பயிலும் பொருளாதார அடிப்படையில் பிற்பட்ட மாணவர்கள்… சென்னையிலேயே இருபதிலிருந்து முப்பது குழுக்களாவது தேறும்.

ஆயிரம் ரூபாயும், விழா நடக்கும் இடத்தில் மற்றவர்களோடு விருந்தும் இவர்களுக்குக் கொடுத்தால் கொஞ்சமாவது உதவி செய்த மகிழ்ச்சி வரும். மாதம் பத்து சிறு கச்சேரி கிடைத்தால் கூடப் போதும், இவர்கள் வாழ்க்கையில் நாதசுவரமும் தவிலும் திரும்ப முக்கியமான இடத்தைப் பெறும்.

இவர்கள் போலத்தான் சிவன் கோவில் ஓதுவார்கள். நான் 1970-களில் சிவகங்கையில் இருந்தபோது, என் தந்தையார் எங்கள் ஊர்க் கோவில் ஓதுவாரை வீட்டு நிகழ்ச்சிகள் எல்லாவற்றுக்கும் தவறாது அழைப்பார். சில சமயம், தெருவோடு போகிற ஓதுவாரை வரவேற்று உள்ளே வந்து உட்காரச் சொல்லித் தேவாரப் பண்ணிசை பாடக் கேட்டு மகிழ்வார். அந்த வயதில் நான் சிவப்புச் சிந்தனைகளோடு அலைந்து கொண்டிருந்தாலும், ஓதுவார் ‘பித்தா பிறைசூடி’ யும், ‘மாசில் வீணையும் மாலை மதியமும்’ பாடலும் மற்றவையும் பாடும்போது கண்ணில் நீர் சுரக்கும். ஓதுவாருக்கு பில்டர் காப்பியோடு ஒரு சிறு தொகையை சன்மானமாக அளித்து அனுப்ப அப்பா தவறுவதில்லை.

சென்னையில் ஓதுவார்களைத் தேடி, தண்ணீர் வராத அடுக்கு மாடி குடியிருப்பில் படி ஏறி வந்து பாடச் சொல்ல ஆசைதான். நேரம் தான் இல்லை. முடிந்தவர்கள் இதைச் செய்தால் பண்ணிசையும் நிலைத்து நிற்குமே! அந்த இசைக்கு சைவம்-வைணவ வேறுபாடும், ஜாதியும் மதமும் இல்லை என்றே இப்போது தோன்றுகிறது .
————————-

2 comments on “Saturday scribblingsமாயன மன்னு வட மதுர மய்ந்தன
  1. ஆனந்தம் சொல்கிறார்:

    1000 ரூபாயா? 5000 குறைந்து நாதஸ்வரபார்ட்டி கிடைக்காது.

  2. ஆனந்தம் சொல்கிறார்:

    அதனால் எங்கள் வீட்டில் எல்லாவற்றுக்கும் CDயில் நாதஸ்வரம். கரண்டி தட்டுக்கு மாற்று

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன